பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 99


பிரிவினரும், பிரதானி சின்னமருது சேர்வைக்காரருக்கு விசுவாசிகளாக மற்றொரு பிரிவுமாக பிளவுபட்டு நின்று அப்பொழுதைக்கப்பொழுது கைகலப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்த பிணக்கு பெரிதாவதற்கு அடிப்படை காரணமாக இருந்தது சிவகங்கைப் பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர் ராணியின் அனுமதி இல்லாமல், ஒரு சிறு எல்லைத் தகராறில் சிவகங்கை படையணிகளை தொண்டமான் சீமைக்குள் அனுப்பி வைத்தது.[1] தொண்டமான் சீமையின் பெரும்பாலான மக்கள் கள்ளர் இனத்தவராக இருப்பதாலும், அவர்களுடன் பல வித தொடர்புகளை வைத்துள்ள சிவகங்கை சீமையின் கணிசமான எண்ணிக்கையிலான கள்ளர் இன மக்களது குரோதத்தை வளர்க்கும் செயலாக ராணியார் இதனைக் கருதினார்.

நாளுக்குநாள் இந்த கருத்து வேற்றுமை அரசியல் நலன்களுக்கு அப்பாற்பட்டதாக, தனிப்பட்ட செல்வாக்கினைக் கோடிட்டுக் காட்டும் ஊமைப் போராக உருவெடுத்தது. இதனை அறிந்து ஆற்காட்டு நவாப் ராணி வேலு நாச்சியாரை தொடர்பு கொண்டு உரிய தகவல்களைப் பெற்றார்.

நவாப் முகம்மது அலியின் கணிப்பில், சிவகங்கைப் பிரதானி சின்ன மருது சேர்வைக்காரர், சிவகங்கை அரசின் தலைமை, பெண்ணாக இருப்பதால், தமது அதிகார வரம்பை மீறிய முறையில் நடந்துள்ளார் என்பது. இந்தக் கருத்தினைப் பின்னர் கடித மூலமும் கும்பெனித் தலைமைக்கு தெரிவித்தார். என்றாலும் சிவகங்கைச் சீமையில் பெற வேண்டிய பேஷ்குஷ் தொகையினை உரிய தவணையில் பெறுவதற்கு என்ன செய்யலாம் என்பதையும் தீவிரமாகச் சிந்தித்து வந்தார்.

உடனே தனது பிரதிநிதி ஒருவரை ஆற்காடு நவாப் சிவகங்கைக்கு அனுப்பி ராணி வேலு நாச்சியாரது பாதுகாப்பை பலப்படுத்தவும் அவரது நிர்வாகத்திற்கு உதவுவதற்கு உரிய ஏற்பாடுகளை செய்யவும் ராணியாருடன் ஒரு உடன்பாடு கொண்டார்.[2] இதனை அறிந்த பிரதானிகள் ராணியாரது பரிவாரங்களுடன் மோதினர். முடிவு ராணியார் வேறு வழியின்றி கோட்டை வாசலை மூடிவிட்டு கோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்தார். இந்த தகவல் கிடைத்தவுடன் நவாப் கும்பெனி கவர்னரைத் தொடர்பு கொண்டார்.

இதோ. 10.2.1789-ல் நவாப் முகம்மது அலி சென்னைக் கோட்டையில் உள்ள கவர்னருக்கு அனுப்பிய கடிதம்.[3]


  1. Radhakrishnan Iyer-General History of Pudukottai State (1931) P: 281
  2. Military Consultations. Vol. 129/26.5.1789. P: 1489
  3. Military Consultations Vol. 128/10.3.1789/P.783-786