பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பதிப்புரை


மிகப் பழமையான நாகரீகங்களில் தமிழர் நாகரீகமும் ஒன்று என்பது உலகு ஒப்புக் கொண்ட உண்மை. ஆனால் வரலாற்று உணர்வு சிறிதும் இல்லாத சமுதாயம் தமிழ் சமுதாயமே என்றால் அது மிகையாகாது.

மிகப் பழமையான நாகரீகமான கிரேக்க நாகரீகத்தின் வரலாற்றை குறித்து வைக்க தூசிடைஸ் (Thucidides) கிடைத்தது போல் நமக்கு ஒருவர் கிடைக்கவில்லை. பெரும்பாலும் வழி வழிச் செய்திகளை நம்பியே தமது வரலாறுகள் வாழ்ந்து கொண்டிருப்பது வேதனைக்குரிய விஷயம். கல்வெட்டுகள், செப்பேடுகள், ஒலை முறிகள் போன்ற வரலாற்றுப் பொக்கிஷங்களை பேணி காக்கத் தவறி விட்டோம்.

கோயில்களில் உள்ள கல்வெட்டுகளை பெயர்த்தும் தகர்த்தும் பூசியும் பெரும்பாலும் சிதைத்து அழித்து வருகிறோம். செப்பேடுகள் போற்றப்படாமல் மாறி வரும் சமுதாய அமைப்பில் 'பேரீச்சம்பழ வண்டி'களை நாடி அடைக்கலம் புகும் நிலையும் உருவாகி விட்டது.

கல்விக் கூடங்களில் வரலாற்றை விரும்பிப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கையும் அருகிக் கொண்டே வருவது கண்கூடு. விஞ்ஞானப் பாடங்களுக்கு உள்ள மரியாதை சரித்திரப் பாடங்களுக்கு இல்லாமற் போய்விட்டது.

வரலாற்று ஆய்வாளர்கள் என்று களத்தில் இறங்கியவர்கள் அடிக்குறிப்புகளையும், செவி வழி செய்திகளையும், நாடோடிப் பாடல்களையும் மட்டும் வைத்து நாட்டின் வரலாறு இதுதான் என்று மனம்போன போக்கில் எழுத துணிந்து விட்டார்கள். பெரும்பாலும் அப்படிப்பட்டவர்களின் நோக்கமெல்லாம் ஒரு குறிப்பிட்ட நோக்கத்தோடு வரலாற்றை தன் பக்கம் திருப்பும் முயற்சியாகவே முடிந்து விட்டது.

சிவகங்கை சீமையின் வரலாறு என்பது இன்றைய பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் மாவட்டத்தின் வரலாறே ஆகும். இந்தப் புதிய மாவட்டத்தின் வரலாறு முறையாக தொகுக்கப்பட வேண்டும் என்பது

XI