பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/122

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

உதவிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது.

கும்பெனித் தளபதி ஸ்டுவர்ட்டின் தலைமையில் படை அணிகள் 29.4.1789 தேதி திருப்பத்துார் கோட்டையை அடைந்தன. புதுக்கோட்டையில் இருந்து வந்த தொண்டமானது மூவாயிரம் வீரர்களும் இந்த அணிகளுடன் இணைந்து கொண்டனர். 8.5.1789 தேதி சிவகங்கை வந்து சேர்ந்தது.[1] பின்னர் இராமநாதபுரத்தில் இருந்து தளபதி மார்டின் தலைமையில் உள்ள அணியும் இவர்களுடன் சிவகங்கையில் சேர்ந்து கொண்டது. ராணியைச் சந்தித்துப் பேசிய தளபதி ஸ்டுவர்ட், தமது அணிகளுடன் அங்கிருந்து முன்னேறியது. 13.5.1789-ம் தேதி கொல்லங் குடியைத் தாக்கியது. மிக நெருக்கமான காட்டு அரணையும் மண்சுவர்களையும் கொண்ட சிறிய ஊர் அது. அங்கு திரண்டு இருந்த மருது சேர்வைக்காரர்களது ஆதரவாளர்கள் துப்பாக்கிகளைப் பயன்படுத்திச் சண்டை இட்டனர். பயிற்சியும் மிகுந்த போர் அனுபவமும் மிக்க கும்பெனிப் படைகளின் தாக்குதலைச் சமாளிக்க இயலாமல் மருது சேர்வைக்காரர்கள் கிழக்கே மூன்று கல் தொலைவில் உள்ள ராம மண்டலம் காட்டுப் பகுதிக்குப் பின் வாங்கினர். நவாப்பின் அணியைச் சேர்ந்த தளபதி முத்தபர்கான் 14.5.1789-ல் நடைபெற்ற போரில் எதிரியின் குண்டுகளால் காயமுற்றார். பன்னிரண்டு பேர் உயிர்துறந்தனர். கொல்லங்குடி கோட்டை இப்பொழுது தளபதி ஸ்டுவர்ட்டின் கைவசம் வந்துவிட்டது.

கொல்லங்குடி கோட்டை பிடிப்பை ராணி வேலுநாச்சியாரது வெற்றியாகக் கருதிய இருபது நாட்டுத் தலைவர்கள் பிரதானிகளது அணியில் இருந்து விலகி ராணியிடம் சென்று வாழ்த்து தெரிவித்தனர். என்றாலும் இந்த நடவடிக்கைகள் ராணி வேலுநாச்சியாருக்கு முழுமையான ஆறுதலை அளிக்கவில்லையென்பதை அவர் 19.5.1789 தேதியன்று தளபதி ஸ்டுவர்டிற்கு வரைந்த மடல் தெரிவிக்கின்றது.[2] இதோ அந்த மடலின் மொழியாக்கம்:

"மன்னர் பெரிய உடையாத்தேவரது குடும்பத்தினர் தங்களது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றனர்.
"தாங்களும் நவாப் முத்தபர்கானும் எம்மை சிவகங்கையில் சந்தித்தபொழுது. நீங்கள் இருவரும் எனது எதிரியை அடக்கி, எனது சீமையில் இருந்து துரத்தியடிக்கப் போவதாகத் தெரிவித்தீர்கள். இரண்டாவது நாள் இங்கிருந்து சென்று கொல்லங்குடியைக் கைப்பற்றியவுடன் இருபது கிராமங்களைச் சேர்ந்த நாட்டுத்
  1. Military Consultations Vol. 129/7.6.1789. P: 1552-56
  2. Military Consultations. vol. 129. P: 146-162 (Dated 19.5.1789)