பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




8. இன்னலில் மறைந்த இறுதி மன்னர்




ராணி வேலு நாச்சியாருக்குப் பதிலாக, கி.பி.1790-ல் சக்கந்தி வேங்கன் பெரிய உடையாத் தேவர், சிவகங்கை மன்னரானார். ஓராண்டிற்கு முன்னர், ராணி வேலுநாச்சியாரையும் அவரையும் கைது செய்து சிறையிட முயன்ற அதே பிரதானிகள் இப்பொழுது அதே மன்னரை மதித்து, அவரது கட்டளைகளை பெறும் அவரது பிரதானிகளாகப் பணியாற்றினர். சீமை நிர்வாகம் சிறப்பாக இயக்கம் பெற்றது.

மக்களிடமிருந்து வசூலிக்கப் பெறும் வரிவகையறாக்களில் மன்னர் கவனம் செலுத்தினார். வானத்தை நம்பி வாழும் குடிகள் செலுத்தும் நிலத்தீர்வையும், வெளிச்சீமைகளில் இருந்து சிவகங்கைச் சீமைக்கு வந்து பண்டங்களை விற்றுச் செல்லும் வணிகர்கள் தங்களது பொருட்களுக்கு சுங்கச் சாவடிகளிலும் பேட்டைகளிலும் செலுத்தும் சுங்கமும் மகமையும்தான் அன்றைய சிவகங்கை அரசின் பிரதான வருவாய்களாக அமைந்து இருந்தன. அப்பொழுது பட்டநல்லூர், சிவகங்கை, திருப்புவனம், இவை தவிர சிங்கம்புணரி ஆகிய ஊர்களில் சுங்கச் சாவடிகளும், சிவகங்கை, மானவீரமதுரை, திருப்புத்துர், தேவகோட்டை, கல்லல், இளையாங்குடி ஆகிய ஊர்களில் பேட்டைகளும் அமைந்து இருந்தன.

காடுகள் மற்றும் பொது இடங்களான மந்தை, மேய்ச்சல் தரைகளில் உள்ள மரங்களில் இருந்து கிடைக்கும் மாவிடை மரவிடை, பாட்டம் ஆகிய வருமானங்களும், திருப்புத்துார், சுண்ணாம்பு இருப்பு, பிரமனுார் போன்ற பெருங்கண்மாய்களில் இருந்து கிடைக்கும் மீன் பாசி வரவுகளும் சில முக்கியமான வரவினங்களாக அமைந்து இருந்தன. இளையான்குடி எமனேஸ்வரம் ஆகிய ஊர்களில் இருந்த இருநூறு தறிகளில் இருந்து