பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

இல்லாமல் எதிரிகளைப் பொருதி வெல்லும் திறமும் அவர்களுக்கு கிடையாது. ஆதலால், சிவகங்கைப் பிரதானிக்கும் பரங்கியருக்கும் ஏற்பட்ட நட்பு, குணமும், குடிமையும் குன்றா குற்றமும் ஆய்ந்து அறிந்து பாராட்டிய நட்பு அல்ல. அரசியல் சார்புடைய நட்பு.

அன்றைய அரசியல் சதுரங்கத்தில், கர்நாடக அரசியலில் மேலாண்மை படைத்திருந்த ஆற்காட்டு நவாப், இயக்கமற்ற பதுமை போல இருந்தார். தென்னகத்தின் மிகச் சிறந்த சுதந்திர வீரரும் மைசூர் மன்னருமான திப்பு சுல்தான் மூன்றாவது மைசூர் போரில், துரோகத்திற்கு இலக்காகி, தனது நாட்டின் பெரும்பகுதியை பரங்கியருக்குத் தத்தம் செய்துவிட்டு பரிதவித்தநிலை. தெற்கே கி.பி. 1792 மே மாத இறுதியில், கும்பெனியின் மீது வெறுப்புற்ற சிவகிரி பாளையக்காரரான சின்னத்தம்பி வரகுண வன்னியன் பக்கத்து பாளையமான சேத்துர் பாளையத்தை ஆக்கிரமித்ததற்காக கும்பெனியரால் கைது செய்து காவலில் வைக்கப்பட்டு பாளையக்காரர் உரிமை பறிபோன நிலை. ஏன்? அண்டையில் உள்ள பெரிய மறவர் சீமையையே எடுத்துக் கொள்வோம். தமது நாட்டில், பரங்கியர் வெவ்வேறு சமயங்களில் வெவ்வேறு காரணங்களைக் காட்டி, வலுவாக காலூன்ற முயன்ற பொழுது எல்லாம், அவர்களது மனக்கோட்டைகளை மன்னர் முத்துராமலிங்க சேதுபதி, மண்கோட்டைகளாக்கி தவிடு பொடியாகும்படி செய்தார். மறவர் சீமையின் கைத்தறி நெசவுத் துணி வணிகத்தில் ஏக போக உரிமையை நிலைநாட்ட முன்வந்த பொழுதும், தானியங்களை இறக்குமதி செய்வதில் சுங்கவிலக்கு சலுகை கோரிய பொழுதும், சேதுநாட்டின் பாம்பன் துறையில் அவர்களது கப்பல்களுக்கு முன்னுரிமையும், சுங்கச் சலுகையும் கோரிய பொழுதும், பரங்கியரது கோரிக்கைகளுக்கு சேதுபதி மன்னர் செவி சாய்க்க பகிரங்கமாக மறுத்துவிட்டார்.[1] இதனால் ஆத்திரமுற்ற கும்பெனித் தலைமை, கயத்தாறிலிருந்த தமது படைகளை இரவோடு இரவாக இராமநாதபுரம் கோட்டைக்கு விரைந்து கொண்டு சென்று 7.2.1795-ம் தேதி பொழுது புலருவதற்கு முன்னர் இராமநாதபுரம் கோட்டையையும், அரண்மனையையும் தாக்கி மன்னரை வஞ்சகமாகக் கைது செய்து திருச்சிக் கோட்டையில் அடைத்தது.[2]

இவைபோன்ற இக்கட்டான சூழ்நிலையில், பாசமும், நேசமும் பாராட்டும் கும்பெனியாரது உறவை முறித்துக் கொள்வது அறிவுடைமையாகாது என எண்ணினர், சிவகங்கை பிரதானிகள். அதனால், உறுமின் வரவு பார்த்து பொறுமையுடன் இருக்கும் கொக்கு போல அவர்கள் காத்து இருந்தனர். சேதுபதிக்கும், சிவகங்கைக்கும் உள்ள


  1. Military Country Correspondence Vol.45/25.10.1794. P. 357-86
  2. கமால். Dr. S.M. விடுதலைப் போரில் சேதுபதி மன்னர் (1987) பக்: 2