பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

தண்டிக்கத்தக்கவர்களா? அவர்களுக்கு தண்டனை வழங்குவதற்கு கும்பெனியாருக்கு தகுதி இருக்கிறதா? இவையெல்லாம் வேறு விஷயம். "வல்லான் வகுத்ததே வாய்க்கால்” என்பது போல அன்று கும்பெனி நிர்வாகம் “சகல அதிகாரமும் சர்வ வல்லமையும்” படைத்த வெடிமருந்து வீரனாக விளங்கியது. நேரடியாக அவர்களை எதிர்த்தவர்களை சிவகங்கைச் சீமையில் அழித்து ஒழித்த பிறகு, அவர்களது எதிர்ப்பாளர்களுக்கு உடந்தையாக ஆதரவாக இருந்தவர்கள் பட்டியல் ஒன்றை கும்பெனித் தலைமை தயாரித்தது. இதில் இராமநாதபுரம் ஜகந்நாத ஐயன் - அன்னியூர் கள்ளர் தலைவர்களான சடைமாயன், கூரிசாமித் தேவர், முள்ளுர் குமரத்தேவன், சிவகங்கை துரைச்சாமி, (சின்ன மருது சேர்வைக்காரர் மகன்) மற்றும் திருநெல்வேலிச் சீமை கிளர்ச்சிக்காரர்கள் என எழுபத்து இரண்டு பேரைக் குறித்தனர். இந்த பட்டியலின் தொடக்கமாகச் சிவகங்கை மன்னர் வேங்கன் பெரிய உடையாத் தேவர் பெயரை வரைந்துயிருந்தனர். 4.10.1801-ம் தேதி காளையார் கோவில் காடுகளில் அவரைக் கண்டு பிடித்து காவலில் வைத்து இருந்தனர்.[1]

இவர் சிவகங்கை மன்னராக கி.பி.1790-ல் பதவி ஏற்ற சில மாதங்களில், சிவகங்கைச் சீமை நிர்வாகத்தில் பிரதானி சின்னமருது சேர்வைக்காரரது சுயேச்சையான செயல்பாடுகள் மேலோங்கி இருப்பதை உணர்ந்து வேறு வழியில்லாமல் தமது கண்களை மூடிக்கொண்டு, காதுகளைப் பொத்திக்கொண்டு நிர்வாகத்தில் இருந்து ஒதுங்கி இருந்தார். இருப்பினும், மிகுந்த ஆன்மிக உணர்வுடன் திருக்கோயில்கள், திருமடங்கள், சத்திரங்கள் ஆகியவைகளைச் செம்மையாகப் பராமரிப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தார். மற்றும் சமுதாயத்திற்குச் சேவை செய்யும் சான்றோர்களை ஆதரித்துப் போற்றவும் இவர் தவறவில்லை. இதற்காக இவர் பல சர்வமான்யங்களையும் தர்மாசனங்களையும் ஜீவித இனாம்களையும் வழங்கி உதவினர். கிடைத்துள்ள பதிவேடுகள், செப்பு பட்டயங்களில் உள்ள பதிவுகளின் படி அவரது அறக்கொடைகள்[2] பட்டியலிட்டுக் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


  1. Military Consultations Vol. 288 (A) (6.10.1801. P: 6886.
  2. சிவகங்கை சமஸ்தானப் பதிவேடுகள்.