பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/197

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 177


என்று கூழுக்குப் பாடிய மூதாட்டி அவ்வையின் குடிதழீகி கோலோச்சிய கோவேந்தரது ஆட்சி பதினேழாவது நூற்றாண்டில் முற்றாக முடிந்ததை ஜமீன்தாரி முறையின் தொடக்கம் தெரிவித்தது.

ஜமீன்தாருக்கு விளைச்சல் காலம் தொடங்கி கிஸ்திப் பணம் வகுப்பதிலும், அதனை குறிப்பிட்ட தவணைகளில் கும்பெனியாருக்குச் செலுத்துவதிலும் அவரது பொழுதெல்லாம் சென்றது. இதற்கிடையில் வானம் பொய்த்து விட்டாலும், வைகையாற்றில் வெள்ளம் வராமல் வறண்டு விட்டாலும் குடிகளது கையறுநிலையைப் போன்று ஜமீன்தாரரது நிலையும் மிகவும் பாதிப்புக்குள்ளாகிவிடும். ஆனைகட்டிப் போரடித்தவர்கள் மாடுகட்டிக் கூட உழவு செய்ய முடியாமல் போய்விடும். இந்த வரிவசூல் பணிக்காக சிவகங்கைச் சீமை தாலுகாக்களாகவும், மாகாணங்களாகவும் பிரிக்கப்பட்டு இருந்தது. அப்பொழுது எத்தனை தாலுக்காக்கள், மாகாணங்கள் இருந்தன என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. ஆனால் தொடக்கத்தில் ஒன்பது தாலுகாக்காகளாக பிரிக்கப்பட்டிருந்தன என்பது தெரிய வருகிறது.[1]

1. சிவகங்கை 2. திருக்கோட்டியூர், 3. திருப்புத்தூர், 4. கண்டதேவி 5. திருவேகம்பத்து. 6. காளையார் கோவில், 7. இளையான்குடி, 8. மானாமதுரை, 9. திருப்புவனம். அதே போல் சோழபுரம், காளப்பூர், சிங்கம்புணரி, கண்டிர மாணிக்கம், பட்டமங்கலம், இரவிசேரி, உருவாட்டி, எமனேஸ்வரம், மங்கலம், கோவானூர், ஆகியவை அப்பொழுது அமைந்து இருந்த சில மாகாணங்களாகும்.

வரிவிதிப்பிற்கான நிலங்கள் பொதுவாக நஞ்சை புஞ்சை என்று வகைப்படுத்தப்பட்டன. இவைகளில் இருந்து பெறப்பட்ட தீர்வை, வாரப்பத்து, தீர்வைப்பத்து, வரிசைப்பத்து, என்ற அடிப்டையில் வசூலிக்கப்பட்டன. வேளாண்மை வேலைகளான உழவு, விதைப்பு, உரமிடுதல், நீர்ப்பாய்ச்சல், களை எடுத்தல், அறுவடை ஆகியவற்றிற்கான குடிகளது செலவுகள் பொதுச் செலவுகள் எனப்பட்டன. மொத்த மகசூலில் இவைகளைக் கழித்துவிட்டு எஞ்சியதில் சரிபாதி, ஜமீன்தாரும் விவசாயியுமாக பெற்றனர். இதற்கு வாரப்பத்து என்று பெயர். புஞ்சை நிலங்களின் மகசூலுக்கு ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ள விகிதத்தில் செலுத்தப்படும் தீர்வைத் தொகைக்கு தீர்வைப்பத்து எனப்படும். இவை தவிர கொடிக்கால், வாழைத் தோட்டங்களின விளைச்சலுக்கு சேத்துவரி என்ற பணவரி வசூலிக்கப்பட்டது. புஞ்சை நிலங்களில் ஒரு குறிப்பட்ட அளவிற்குக் குறைவாக மகசூல் வந்தால், அதற்கு நிர்ணயிக்கப்பட்ட விகிதத்தில் பணம் வரிவசூலிக்கப்பட்டது. இதனை வரிசைப்பத்து என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


  1. 190. சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள்.