பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/199

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 179


நிலைகளின் மீன்பாசி, காடுகளின் இலை காய் கனி என்ற மேற்பலன்கள் போன்றவை. இத்தகைய வசூல் பணிகளில் கண்ணும் கருத்துமாக கவனத்தைச் செலுத்த வேண்டிய பொறுப்பு மட்டும் ஜமீன்தாருக்கு இருந்தது.

முந்தைய மன்னர்களைப் போல உரிமை இயல், குற்றவியல், ஆகிய துறைகளின் வழக்குகளைப் பரிசீலித்து நியாயம் வழங்கும் உரிமையும் இந்த புதிய ஜமீன்தாரி முறையில் ஜமீன்தாருக்கு வழங்கப்படவில்லை. “அரசு அன்று கேட்கும் தெய்வம் நின்று கேட்கும்" என்ற பழமொழியும் பொருளற்றதாகப் போய்விட்டது. முந்தைய காவல் முறையான தலங்காவல், திசை காவல், தேசகாவல், என்ற முறைகள் அகற்றப்பட்டு சிவகங்கையில் புதிதாக காவல்துறை ஏற்படுத்தப்பட்டது. உரிமை இயல் வழக்குகளுக்கு மதுரையில், சாதர் அதாலத் என்ற நீதி மன்றமும் மேல் முறையீட்டிற்காக இராமநாதபுரத்தில் மாவட்ட நீதிமன்றமும், சென்னையில் புரொவின்சியல் கோர்ட் என்ற உயர்நீதிமன்றமும் செயல்பட்டன. இந்த மன்றங்களின் தீர்ப்புரைகளில் திருப்தியடையாத குடிமகன், இங்கிலாந்து நாட்டில் உள்ள பிரிவிகன்வுசில் என்ற கும்பெனியாரது உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீட்டைத் தாக்கல் செய்து நியாயம் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டு இருந்தது.

இவ்விதம் புதிய ஜமீன்தாரி அமைப்பு, மக்களுக்கும், ஜமீன்தாருக்கும் உள்ள இடைவெளியினை நடைமுறையில் அதிகப்படுத்தி இருந்தாலும், காலங்காலமாக பொதுமக்களுக்கும் ஆட்சியாளருக்குமிடையில் நிலவிய விசுவாசம், நல்லுறவுகள் தொடர்ந்து நீடித்தன. பொங்கல் விழாவின் பொழுது குடிமக்கள் கரும்பு, மஞ்சள், புதுப்பானை, கருப்பட்டி ஆகிய பொங்கல் சீர்ப் பொருட்களை ஜமீன்தார்களுக்கு கொண்டு செல்லும் முறை இருந்தது. இந்த அன்பளிப்புப் பொருள்களுக்கு உலுப்பை என்று பெயர். இதே போல், மகர் நோன்புப் பெருவிழா, தீபாவளி விழா ஆகிய விழா நாட்களின் பொழுது, குடி மக்கள் அரண்மனைக்கு மகர்நோன்புக் குட்டி, கூழைக்கிடாய் என்ற ஆட்டுக் கிடாய்களை அன்பளிப்பாக ஜமீன்தாருக்கு வழங்கும் வழக்கமும் தொடர்ந்தது.[1]" இதற்குப் பகரமாக அரண்மனையில் இருந்து அந்தக் குடிகளைச் சிறப்பித்து அனுப்பும் பழக்கம் இருந்தது.

மற்றும் சிவகங்கைச் சீமையின் கிராமங்களில் கோயில் விழாவில் தேரோட்டம், மஞ்சுவிரட்டு, ஆகிய விழாக்களின் பொழுது ஜமீன்தார் நேரில் சென்று குங்கும, சந்தனப் பேழைகளைத் தொட்டுக் கொடுத்தல், வடம் பிடித்துக் கொடுத்தல், ஆகியவைகளை மேற்கொண்டு, மக்களுக்கு மகிழ்ச்சியும் சிறப்பும் சேர உதவினார்.


  1. Administrative Report of Sivagangai Samasthanam for 1943/1944