பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

180 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


இவ்வாறு மக்கள் ஜமீன்தாரை, முந்தைய கால மன்னராகவே மதித்துப் போற்றும் விசுவாசத்தை அறிந்த கும்பெனியார், சிவகங்கை அரண்மனையில் நூற்று இருபது சீருடை அணிந்த கும்பெனி வீரர்கள் நிலை கொண்டு இருப்பதற்கும் ஜமீன்தாரது சேவகர்கள் வாட்களுடன் பணியாற்றுவதற்கும், நாளடைவில் அனுமதி வழங்கினர். ஒரளவு ஜமீன்தாரது பதவியின் தோற்றத்திற்குச் சிறப்பூட்டுபவையாக இந்த நடைமுறைகள் அமைந்தன.

படைமாத்தூர், கெளரி வல்லப தேவர், சிவகங்கைத் தன்னரசு மன்னரது வழியினர் என்ற முறையிலும், புதிய முதல் ஜமீன்தார் என்ற முறையிலும் குடிகளுடனும், கும்பெனியாருடனும் நல்ல தொடர்புகளைக் கொண்டிருந்தனர். தமது முன்னோர்களைப் போல அறக் கொடைகளை வழங்கி இருப்பதை சிவகங்கை சமஸ்தான பதிவேடுகள் தெரிவிக்கின்றன. ஆனால் கி.பி.1829-ல் காலமான இவருக்கு ஆண் வாரிசு இல்லாததாலும், அவர் மரணமடைந்த பொழுது அவரது மனைவி பர்வதவர்த்தினி நாச்சியார் கர்ப்பவதியாக இருந்ததை சாதகமான சூழ்நிலையாகக் கொண்டு ஜமீன்தாரது இறந்து போன மூத்த தமையனார் ஒய்யாத் தேவரது இரண்டாவது மகன் முத்து வடுகநாதர், ஒரு பொய்யான மரண சாசனத்தைக் கலெக்டரிடம் காண்பித்து ஜமீன்தாராவதற்கு ஒப்புதலைப் பெற்றார்.

இவரது உரிமையை மறுத்து கி.பி. 1834-ல் இறந்துபோன முதல் ஜமீன்தார்களது மனைவிகளும், மக்களும் பல உரிமை இயல் வழக்குகளைத் தொடர்ந்தனர். தங்களுக்கு சாதகமாகவும், பாதகமாகவும் பல தீர்ப்புரைகளைப் பெற்றனர். அடுத்தடுத்துப் பாதிக்கப்பட்டவரது முறையீடு மேல் முறையீடு என்று நடவடிக்கைகளைத் தொடர்ந்ததால், ஜமீன்தாரியில் நிலையற்ற தன்மை நிலவியது. கி.பி. 1896-ம் வரை ஜமீன்தார்கள் தங்களது சொந்தப் பொறுப்பில் செய்யத் தக்க பல நல்ல பணிகளும் நடைபெறாமல் போய்விட்டன. அதே நேரத்தில் இந்த ஜமீன்தாரி வழக்குகளால் உருப்படியான நன்மை எதுவும் இல்லை என்பதை குடிகள் உணர்ந்து தவித்தனர்.

நாட்கள் ஆக, மக்கள் பெருக்கமும் மிகுதியாக, வேறு தொழில்கள், தொழில் வாய்ப்புக்கள் இல்லாத நிலையில் சிவகெங்கை சீமை மக்கள் விவசாயத்தை தொழிலாக கொள்வது அல்லது சார்ந்து நிற்பதும் அதிகரித்தது. அதே நேரத்தில் விளைச்சல் நிலப்பரப்பும், விளைச்சலும் அப்படியே இருந்தது. விவசாயத்தைச் சார்ந்துள்ளவர்களது தேவை நிறைவு செய்யப்பட முடியாத நிலை. மூன்றில் ஒரு பங்காக இருந்த விவசாயி வர்க்கம் மக்கட் தொகையில் சரிபாதி அளவிற்கு வளர்ந்தது.[1]


  1. Palm Dutt. S. - India Today (1950)