பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


ஜமீன்தார் நிலைக்குத் தாழ்த்தியது. ஆனைபடுத்தாலும் குதிரையின் உயரம் என்ற பழமொழிக் கிணங்க மனஆறுதல் பெற்றவர்களாக வாழ்ந்தனர் இந்த ஜமீன்தார்கள்.

சிவகங்கை ஜமீன்தாரியின் பெரும்பாலான குடிமக்கள் இந்து சமயத்தைச் சார்ந்த கள்ளர், மறவர், அகம்படியர் என்ற முக்குலத்தோர் இனத்தவர்கள் மற்றும் நகரத்தார், பிராமணர், வல்லம்பர், வேளார், இஸ்லாமியர், கிறித்தவர், உடையார், பள்ளர் பறையர், இசைவேளாளர் என்ற சிறுபான்மை சமூகத்தினரும், இந்தச் சீமையின் சமுதாய அமைப்பைச் சேர்ந்தவர்கள். இவர்களது வாழ்க்கை வசதிகளைப் பெருக்கிக் கொள்வதற்குப் பல தொழில்களை மேற்கொண்டிருந்தனர், என்றாலும் இவர்களில் பெரும்பான்மையினர், சாதி, மத, இன வேறுபாடு இன்றி ஈடுபட்டிருந்த தொழில் வேளாண்மைதான். இந்த ஜமீன்தாரியின் தெற்குப் பகுதியில் உள்ள வைகை நதியின் வெள்ளப் பெருக்கால் ஒரளவு வேளாண்மைத் தொழில் நடைபெற்றாலும், பெரும்பான்மையான நஞ்சை, புஞ்சைக்கு காலத்தில் பொழிகின்ற மழையின் நீர், கண்மாய்களிள் தேக்கி வைக்கப்பட்டு கழனிகளில் நெல் விளைச்சலுக்குப் பயன்படுத்தப்பட்டது. இந்த நிலங்களில் விளைச்சலில் சரிபாதி அளவினை ஜமீன்தார் நிலத்தீர்வையாக நிலத் தீர்வையாகப் பெற்று வந்தார். இவ்விதம் பெறும் மொத்த வசூலில் கும்பெனியார் மூன்றில் இருபகுதியை கிஸ்தியாகப் பெற்று வந்தனர். எஞ்சியுள்ள தொகையினைக் கொண்டு ஜமீன்தார் எந்தவிதமான நன்மைகளையும் செய்ய இயலாத நிலை.

பைந்தமிழ் பயின்ற புலவர்கள் பாட்டும் உரையும் பயிலா பதடிகள் ஒட்டைச் செவியில் உயர்தமிழை எங்ங்னம் ஒதுவது என்று ஒர்ந்தவர்களாக ஒலைத்துக்குகளைக் கட்டிப் பரணியில் போட்டனர். கல்லைத்தான், மண்ணைத்தான், காய்ச்சித்தான், குடிக்கத்தான் கற்பித்தானா? என்ற கவலை தோய்ந்தவர்களாக வாழ்ந்து வந்தார்கள். மற்றும், நாட்டுக் கணக்கு, தலங்காவல், திசைகாவல் ஆகிய பணிகளுக்கு வழங்கப்பட்டிருந்த துண்டு மானிய நிலங்கள் கும்பெனியாரால் மேற்கொள்ளப்பட்டு அவர்களது பணிக்கான ஊதியம் பணமாக வழங்கப்பட்டது.

இவ்விதம் சமுதாயத்தின் பலநிலைகளில் உள்ள மக்களது வாழ்க்கையினைப் பாதிக்கும் வகையில், பரங்கியரது புதிய ஜமீன்தாரி முறை அமைந்து இருந்தது. சிவகங்கைச் சீமைக்கு மட்டும் ஏற்பட்ட ஆற்றிடைக் குறை அல்ல. இது அன்றைய சென்னை மாநிலம் முழுவதற்கும் - தமிழ்நாடு, கேரளா, ஆந்திரம், கன்னடம் ஆகிய அனைத்துப் பகுதிகளின் தலை விதியாகி இருந்தது.