பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/210

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

190 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


அவர்களது ஆட்சிக் காலத்தில் சிவகங்கைச் சீமையில் நிலவிய அரசியல் குழப்பங்களுக்கிடையில் அந்த ஆட்சியாளர்கள் எந்த அளவிற்கு தமிழுக்குத் துணையாக இருந்தனர் என்பதை தெரிவிக்கக் கூடிய ஆவணங்கள் கிடைக்கவில்லை.

அடுத்து கி.பி.1801 இறுதியில் சிவகங்கைச் சீமை தன்னாட்சி நிலையை இழந்து ஜமீன்தாரியாக மாற்றப்பட்டது. இந்த புதிய அரசியல் அமைப்பின் முதல் ஜமீன்தாராகப் பதவி ஏற்றவர் படைமாத்துார் கெளரிவல்லபத் உடையாத் தேவர் கி.பி. 1829-ல் வரை இவரது ஆட்சி நீடித்தது. இவரைப் பற்றிய சில தனிப்பாடல்கள் வழக்கில் உள்ளன. ஆனால் அவைகளைப் பாடிய புலவர்களது பெயர்கள் அறியத் தக்கதாக இல்லை.

தனக்குப் பிறகு பிரளயம் ஏற்படும் என்று பிரஞ்சு நாட்டு மன்னர் பதினான்காவது லூயி தெரிவித்ததாக ஐரோப்பிய வரலாற்றில் ஒரு செய்திக் குறிப்பு உண்டு. அதைப் போல இந்த மன்னர்களது ஏழு மனைவிகளில் மூன்று மனைவிகளுக்கு குழந்தைகள் இல்லை. எஞ்சிய நான்கு மனைவிகள் மூலம் ஆறு பெண்கள் வாரிசாக இருந்தனர். என்றாலும் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு இறந்த கெளரி வல்லபத் தேவரது உடன்பிறந்த ஒய்யாத் தேவரது மகனான முத்துவடுகனாத தேவர் ஜமீன்தாராக நியமனம் செய்யப்பட்டார். இதன் காரணமாக மதுரை, சென்னை லண்டன், ஆகிய நகர்களில் உள்ள நீதிமன்றங்களில் கி.பி.1832 முதல் தாக்கல் செய்யப்பட்ட ஏராளமான உரிமையியல் வழக்குகள், முறையிடு மேல்முறையீடு, இறுதிமுறையிட்டு தீர்ப்புரை என்ற வகையில் கி.பி. 1898 வரை நீடித்த காரணத்தினால் சீமையின் பொருளாதாரமும், சீமையின் உரிமை கொண்டாடியவர்களது வசதியும் மிகவும் பாதிக்கப்பட்டது. எது எப்படி இருந்தாலும் ஆண்டு தோறும் கும்பெனி அரசுக்கு பேஷ்குஷ் தொகையாக ரூ. 2.58,640,14,00 செலுத்தியாக வேண்டும். ஜமீன்தார் உரிமை யாருக்கு என்ற வினாவிற்கு உறுதி சொல்லக் கூடிய நீதிமன்றத் தீர்ப்புகள் மாறி மாறி வெளி வந்துகொண்டிருந்ததால் குடிகளிடமிருந்து பெற வேண்டிய தீர்வை வசூல் சரிவர நடைபெறவில்லை. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சிவகங்கை ஜமீன்தாரியைத் தனியார்களிடம் குத்தகைக்கு விடும் நிலை ஏற்பட்டது. கி.பி.1864 முதல் 1877 வரை ஜமீன்தாரியாக இருந்த ராணி காத்தமநாச்சியார், கும்பெனியாருக்குத்தவணை தொகையை (பேஷ்குஷ் தொகையைச் செலுத்தும் பிரச்சனையைச் சமாளிக்க திரு கிருஷ்ண சாமி செட்டிக்கு ஜமீன்தாரியை குத்தகைக்கு 1.6.1877-ல் கையெழுத்திட்டுக் கொடுத்தார்.[1]


  1. Annasamy Ayyar - Sivagangai its origin and litigations (1898)