பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/212

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12. வேண்டும் விடுதலை எங்கும்



இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் நாடு முழுவதும் ஆங்காங்கு பிரிடிஷ் அரசினருக்கு எதிரான பல கிளர்ச்சிகள் துளிர்விட்டன. அவைகளில் சில தனி நபர்களது பயங்கரச் செயல்களாக பரிமளித்தன. தமிழ்நாட்டில் தென்காசி ரயில் நிலையத்தில் கலைக்டர் ஆஷ் என்பவரை வாஞ்சிநாதன் என்ற இளைஞன் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற நிகழ்ச்சியினை எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம். ஆனால் மோகன்தாஸ் கரம் சந்த் காந்தி இந்திய தேசிய இயக்கத்தின் தலைமையை ஏற்றதும், இத்தகைய வன்முறையில் இருந்து விலகி மக்கள் கட்டுப்பாட்டுடனும், ஒற்றுமையுடனும் கிளர்ச்சிகளில் பங்கு கொள்ளும் பண்பாடு ஏற்பட்டது.

இதற்குச் சிறந்த சான்றாக கி.பி.1920-ல் நடந்த கிலாபத் இயக்கம். இந்த இயக்கம் நாட்டின் சிறுபான்மையரில் பெரும்பான்மையரான இஸ்லாமியர்களையும், அணைத்தவாறு நாடுதழுவிய பேரியக்கமாக அந்தக் கிளர்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி வடக்கே இருந்து முகம்மது அலி சகோதரர்கள் தமிழ்நாட்டில் சுற்றுபயணம் செய்துஆதரவு திரட்டினர். அப்பொழுது அவர்கள் சிவகங்கைச் சீமையில், இளையான்குடி, மானாமதுரை, சிவகங்கை ஆகிய ஊர்களில் பொதுக் கூட்டங்களில் உரையாற்றினர். பிரிட்டிஷ் அரசின் கொடுமைகளுக்கு எதிராக வந்தேமாதரம், அல்லாஹூ அக்பர் என்ற கோஷங்கள் எங்கும் எதிரொலித்தன. என்றாலும் அதே ஆண்டு, தர்மபுரியில் இருந்து வந்த சுப்பிரமணிய சிவா, காரைக்குடி மேல ஊரணிக் கரையில் பாரத மாதா ஆசிரமத்தை அமைத்து செயல்பட்ட பொழுதுதான் சிவகங்கைச் சீமை எங்கும் இந்திய தேசிய காங்கிரஸ் பற்றியும், காந்தியடிகள் பற்றியும் மக்கள் ஈடுபாடு கொள்ளத் தொடங்கினர். பத்திரிகைகள், வானொலி