பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/23

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 3


மேலாண்மையை ஏற்ற குறுநில மன்னர்களாகவும் விளங்கினர்.

ஆதலால் கி.பி. பதினைந்து, பதினாறாவது நூற்றாண்டுகளில் சிவகங்கைச் சீமை உள்ளிட்ட சேது நாட்டுப் பகுதிகளிலும் அவர்களது ஆளுமை பரவி இருந்தது. இதனை உறுதிப்படுத்தும் வகையில், அவர்களது கல்வெட்டு, திருப்பத்தூர், காளையார் கோவில், மானாமதுரை, இளையான்குடி, ஆகிய ஊர்களில் உள்ளன. மாறவர்மன் குலசேகர பாண்டியன் (கி.பி. 1268–1311) ஆட்சியில் கங்கை கொண்ட சூரிய தேவனாதிராயன் என்பவர் இளையான்குடி, திருக்கோட்டியூர், திருக்கானப்பேர், துகவூர் ஆகிய ஊர்களில் திருக்கோயில் பணிகள் செய்துள்ளார்.[1] திருப்புத்தூர் வட்டார இரணியமுட்டத்து ஆற்காட்டு ஊரினரான திருவேங்கடத்து உடையான் வாணாதிராயன் என்பவர், அழகர் கோவிலிலும், பொன்னமராவதியிலும் பல திருப்பணிகளை மேற்கொண்டிருந்தார்.[2] கோனாட்டைச் சேர்ந்த மதுரைப் பெருமாள் வாணாதிராயர் திருப்புத்துரையடுத்த சதுர்வேதி மங்கலத்தில் பாண்டிய மன்னன் பெயரால் திருமடம் ஒன்றை நிறுவினார்.[3] கிழக்குக் கரையை அடுத்த முத்தார்க் கூற்றத்து கப்பலூர் மாவலி வாணாதிராயனையும், வடவல்லத் திருக்கை நாட்டு இந்திராவதநல்லூரில் காலிங்கராய வாணாதிராயன் பற்றியும் கி.பி.1254-ம் வருட ஶ்ரீ வைகுண்டம் கல்வெட்டு குறிப்பிடுகிறது.[4] திருமாலிருஞ்சோலை நின்றான் வாணாதிராயன் பற்றியும், கந்தரத்தோள் மாவலி வாணாதிராயனது காளையார் கோவில் திருப்பணி பற்றியும் முறையே திருப்பெருந்துறை, இளையான்குடி கல்வெட்டுக்களும், செப்பேடுகளும் தெரிவிக்கின்றன. இவர்கள் "மதுராபுரி நாயகர்", "பாண்டியகுலாந்தகர்" என்ற விருதுகளையும் பெற்று இருந்தனர்.

இவர்களைப் போன்று பாண்டிய நாட்டில் அரசியல் சூழ்நிலைகளினால் தன்னாட்சி பெற்ற மறக்குடிகளின் தலைவராக சேதுபதிகள் தங்களது ஆட்சியை கிழக்குக் கடற்கரையை ஒட்டிய பகுதியில் தோற்றுவித்தனர். இவர்களது ஆட்சியின் பரப்பு மறவர் சீமை அல்லது சேது நாடு என வழங்கப்பட்டது. கள்ளர் நாட்டை வட எல்லையாகவும், வேம்பாற்றை தெற்கு எல்லையாகவும், மதுரை மாநகரை அடுத்த புறநகர்ப் பகுதியை மேற்கு எல்லையாகவும், விரிந்த வங்கக் கடற்கரையை கிழக்கு எல்லையாகவும், இந்த நாடு கொண்டிருந்தது. நெய்தலும், பாலையும், குறிஞ்சியும், முல்லையும், மருதமும் மயங்கிய ஐந்திணைகளுடன்


  1. வேதாசலம்.வெ. பாண்டிய நாட்டில் வானாதிராயர்கள் (1987) பக்: 29-30
  2. Inscriptions No.584/A, 585, 587/1902.
  3. வேதாச்சலம்.வெ - பாண்டிய நாட்டில் வாணாதிராயர்கள் (1987) பக் 15-16
  4. மேலது - பக்: 91