பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/237

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 217


சிவகங்கைச் சீமை மன்னர்களாக இருந்தனர் என்பதை நிலை நாட்டுவதற்காகவே, இந்த நூல் எழுதப்பட்டுள்ளது. சிவகங்கை அம்மானையும் சிவகங்கைச் சீமைக் கும்மியும், மருது பாண்டியர்களுக்கு இலக்கிய வழக்காக துரை, வேந்தர், மன்னர், ராஜன் என்று சிறப்பு அடைகளைப் பயன்படுத்தி இருப்பதை உண்மையென உரைக்க முற்படும் இந்த நூல் அந்த இரண்டு நாடோடி இலக்கியங்களையே பெரிதும் சார்ந்து வரையப்பெற்று இருப்பதுடன் நாடோடி இலக்கியம் என்ற வகையில் அவைகளில் மிகைப்படுத்தி இட்டுக்கட்டி சொல்லப்பட்ட செய்திகளை, உண்மை வரலாறாக வரைந்துள்ள இந்த நூலின் சில பகுதிகளை இங்கு பார்ப்போம்.

இந்த நூலின் தொடக்கத்தில் சிவகங்கைச் சிம்மாசனம் என ஒரு ஒளிப்படம் அச்சிடப்பட்டுள்ளது. அதன் கீழே "இந்த சிம்மாசனத்தை அடையத்தான் கெளரி வல்லவர் ஆங்கிலேயர் அணியில் சேர்ந்தார்' என்று வரையப்பட்டுள்ளது.

வாசகப் பெருமக்கள் அந்தப் படத்தை உற்றுப் பார்த்தால் உண்மையிலேயே இந்த சிம்மாசனம் சிவகங்கைத் தன்னரசு மன்னர்களுடையது தானா என்பது விளங்கும். இப்பொழுது பாருங்கள். சிம்மாசனத்தின் உச்சியில் ஒரு கிரீடத்தின் உருவம் காணப்படுகிறது. இது நமது நாட்டு மன்னர்கள் சூடிக் கொள்ளும் முடி போன்றது இல்லையல்லவா?

அடுத்து, அந்தச் சிம்மாசனத்தின் மேல்பகுதியின் இரு பக்கங்களிலும் முறையே சிங்கம், குதிரை ஆகியவைகள் அமர்ந்த நிலையில் இதுவும் நமது நாட்டு பாணி இல்லை தானே.

அடுத்து, மன்னரது இருக்கையின் பின்புறம் மேல் பகுதியில் பூ வேலைப்பாடுகளுக்கு மத்தியில் ஒரு கேடயம் போன்ற உருவம் இதைப் பற்றியவாறு இருபுறமும் மீண்டும் சிங்கமும் குதிரையும் அமர்ந்த நிலையில் கேடயம் போன்ற நடுப்பகுதி உருவத்தில் ஒரு சிலுவை உருவம், அந்தக் கேடயத்தின் மீது ஒரு சிங்க உருவம். இப்பொழுது சிந்தித்துப் பாருங்கள். இத்தகைய சிம்மாசனத்தின் மீது அமர்ந்தா சிவகங்கை மன்னர்கள் ஆட்சி செலுத்தினர். இல்லவே இல்லை. இந்த சிம்மாசனத்தில் அமைப்பு, கிரீடம், சிங்க, குதிரை உருவங்கள் கேடயத்தில் காணப்படும் கிறித்தவரது சிலுவை உருவம் இவையனைத்தும் இங்கிலாந்து மன்னர்களது அரசு இலச்சினையாகும். கி.பி.1921-ல் இந்தியாவிற்கு வருகை தந்த இங்கிலாந்து நாட்டு வேல்ஸ் இளவரசருக்கு சென்னை மெமோரியல் ஹாலில் சென்னை நகரப் பெருமக்கள் சார்பாக வரவேற்பு அளிக்கும் பொருட்டு இளவரசருக்காக புதிதாக அமைக்கப்பட்டது. இந்த போலி சிம்மாசனம். விழா முடிந்தவுடன் சம்பந்தப்பட்ட சாமான்களை ஏலத்துக்கு விட்டு