பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

218 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


விற்ற பொழுது, இந்தப் போலி சிம்மாசனத்தை அப்பொழுது சென்னையில் இருந்த சிவகங்கை ஜமீன்தார் திரு. துரைசிங்கத் தேவர் அவர்கள் வாங்கி வந்து அரண்மனையில் வைத்து இருந்தார். அதனை 1978-ல் இராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் திரு. நாராயணன்.ஐ.ஏ.எஸ். பெற்று, இராமநாதபுரம் அரசு அருங்காட்சியகத்தில் சேர்த்தார்.

இவ்விதம் நூலின் தொடக்கமே, உண்மைக்கு மாறாகத் தடம் புரண்டது போல இந்த நூலின் பல நிகழ்ச்சிகளும் வரலாற்றுக்கு முரணான பார்வையில் வழி மாறி இருப்பதைப் பார்க்கலாம்.

பொதுவாக வரலாற்றுச் சான்றுகள், நேர்முகத் தடயங்கள் இல்லாத நிலையில், கோயில் ஒழுகு தல புராணம், இலக்கியங்கள் ஆகியவற்றில் குறிக்கப் பெற்றுள்ள செய்திகளை அவற்றின் உண்மைத் தன்மைகளை ஆய்ந்துணர்ந்த பிறகு அவைகளை வரலாற்றின் கூறுகளாக நம்பத் தக்கதாகக் கொள்ளலாம் என்பதே வரலாற்று வல்லுனர்களது முடிவு. பேராசிரியர் திரு. நா.வானமாமலை அவர்கள் இந்த பொருள் பற்றி கொடுத்துள்ள எச்சரிக்கையை இங்கு குறிப்பிடுதல் பொருத்தமானதாகும்.

"... இந்தப் பாடல்களைக் கொண்டு மட்டும் சரித்திர நிகழ்ச்சிகளை நாம் உறுதியாக அறிந்து கொள்ள முடியாது. இவற்றை ஒதுக்கித் தள்ளி விட்டும் உண்மையான நிகழ்ச்சிகளை அறிந்து கொள்ளவும் இயலாது. கிடைக்கும் சரித்திர சான்றுகளையும், நாட்டுப் பாடல்களையும், உற்று நோக்கி உண்மைகளைச் சரி பார்த்து முடிவுக்கு வர வேண்டும்."

தமிழகத்தின் தொன்மைக் கால, பிற்கால வரலாற்றினை தெரிந்து கொள்ள இலக்கியங்கள், கல்வெட்டுப் பதிவுகள், செப்பேடுகள், ஒலை முறிகள், கோயில் ஒழுகுகள், வெளிநாட்டுப் பயணிகளது பயணக் குறிப்புகள் ஆகியன துணை புரிகின்றன. ஆனால் அண்மைக் காலமாகிய பதினெட்டு, பத்தொன்பதாவது நூற்றாண்டு நிகழ்வுகளைப் புரிந்து கொள்வதற்கான நம்மவர்களது ஆவணங்கள் மிகக் குறைவு. இராமநாதபுரம், சிவகங்கை சமஸ்தான ஆவணங்கள், மதுரை மிஷன் ஆவணங்கள், சிங்கம்பட்டி, எட்டையாபுரம் ஜமீன் ஆவணங்கள், துபாஷ் ஆனந்தரங்கம் பிள்ளை நாட்குறிப்புகள், சுவார்ட்ஸ் பாதிரியார் குறிப்புகள், ஆற்காட்டு நவாப் ஆவணங்கள், புதுக்கோட்டை தர்பார் ஆவணங்கள், ஆகியவைகளில் ஆற்காட்டு நவாப் ஆவணங்கள் (பார்சி மொழியில் அமைந்தவை) ஆவணக் காப்பகத்தில் பாதுகாக்கப்பட்டு வருவதும் இந்த ஆவணங்களை, இதுவரை ஆங்கிலத்திலோ அல்லது தமிழிலோ மொழியாக்கம் செய்யப்படவில்லை. தொகுதிகளாக பிரிக்கப்பட்டு தொகுதிச் சுருக்கமும் பட்டியலும் தயார் செய்யப்படவில்லை. புதுக்கோட்டை மன்னரது தர்பார் ஆவணங்களும், இதுவரை வரலாற்று ஆய்வாளர்களுக்கு எட்டாக் கனியாகவே இருந்து வருகின்றன.