பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/252

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

232 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தளபதியும் கிளர்ச்சித் தலைவருமான துான்தியாநாக் என்பவர் விருபாட்சிக்கு அனைத்து உதவிகளையும் அளித்து ஏகாதிபத்திய எதிர்ப்பு போருக்கு ஆயத்தப்படுத்தினார். தென்னாட்டு கிளர்ச்சி தலைவர்கள் திண்டுக்கல்லில் கூடியபொழுது மராட்டிய மாநில கோல்காபூரில் இருந்து தமிழ்நாட்டு நாங்குநேரி (நெல்லை மாவட்டம்) வரைக்கும் கிளர்ச்சிகளை தொடர்வது என்றும் அதன் துவக்கமாக கோவையில் 3.6.1800-ல் கும்பினியார் பாசறையை தாக்கி அழிப்பது எனவும் முடிவு செய்யப்பட்டது[1] கோவை நகருக்கு 10 மைல் தொலைவில் 500க்கும் அதிகமான குதிரை வீரர்களதாக்குதல் தொடுப்பதற்கு கூடியிருந்த தகவல் கும்பெனி தளபதி மக்காலிஷ்டருக்கு எட்டியது. அவன் தம்மிடமிருந்த ஐரோப்பிய, ராஜபுத்திர படை அணிகளைக் கொண்டு கிளர்ச்சிக்காரர்களை வளைத்து பிடித்து கிளர்ச்சியை நசுக்கினான். இந்த கிளர்ச்சியில் பங்குகொண்டவர்கள் பெரும்பாலும் முன்னாள் மைசூர் ராணுவ குதிரை வீரர்கள் ஆகும்.[2] தூக்கிலே தொங்கி தியாகிகள் ஆகிய 42 பேரில் 13 பேர் மைசூர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள்.[3] இந்தக் கிளர்ச்சியில் விருபாட்சி நாயக்கர் கலந்து கொள்ளவில்லை. அப்பொழுது அவர் திண்டுக்கல் சீமையில் கிளர்ச்சியில் ஈடுபட்டிருந்தார் என்பது நினைவு கொள்ளத்தக்கது.

மற்றும் மேலே கண்ட முரண்பாடுகளை தவிர செப்பேட்டின் சொற்றொடர் அமைப்பும் சரியாக இல்லை குறிப்பாக வரி 12-ல் 'வெள்ளை மருது சேர்வைக்காரர் இந்த செப்புப்பட்டயத்தை' என்று தொடங்கிய தொடர் "........ வீரபாண்டிய சேர்வைக்காரர் சேவைக்கும்" (வரி 15 முடிவு) "...... காவல் காத்து வருவதற்கும் (வரிகள் 17, 18) ....மீட்டு வந்ததற்காக (வரிகள் 24, 25) என எச்சமாக நின்றுவிட்டு, பின்னர், 'தளவாய் நைனப்பசேர்வைக்காரரால் ......கட்டி, குடுத்து, அபிமானிச்சு தெரியப்படுத்துகிறது (வரிகள் 26, 28) என முடிகிறது. மாறாக வெள்ளை மருது சேர்வைக்காரர் உத்தரவின்படி தளவாய் நைனப்பன் சேர்வைக்காரரால் (வரி 26) என்ற தொடர், வரி 12-ஐ தொடர்ந்து வந்து ஏனைய தொடர்களுடன் முடிந்திருந்தால் பட்டயத்தின் செய்தி இன்னும் தெளிவாக இருந்திருக்கும்.

இதுவரை கிடைத்துள்ள மடப்புரம் காவேரி அய்யனார் கோவில் பட்டயம்[4] தொண்டி கைக்கோளன் ஊரணி கல்வேட்டு[5] ஆகியவைகளின் சொற்றொடர் அமைப்புகளிலிருந்து இந்தப்பட்டயம் வேறுபடுவதால் போலிப்பட்டயமாக கருதப்படுகிறது.


  1. Rajayyan. Dr.K. Selections from the History of Tamil Nadu (1978) P: 278
  2. Political consultations. Vol. 1(A) 11.6.1800. P: 17-20
  3. Ibid. Vol. 2(A) 21.9.1800, P: 562
  4. மறவர் சீமை ஒலைச் சாசனங்கள் (கல்வெட்டு இதழ் எண்:18) - திரு. வெ.வேதாசலம்
  5. தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக பேராசிரியர் திரு. செ.ராசு 1985-ல் படியெடுத்தது