பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

234 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


அறிக்கைகள், கடிதங்கள், பதிவேடுகள். இவைகளில் அவர்களது நலன்களுக்கு எதிரான இந்த நாட்டு மன்னர்கள், மக்கள் தலைவர்கள், அவர்களைப் பற்றி என்ன நினைத்தார்கள், எத்தகைய எதிர் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். அவர்களது மனப்பண்புகளும், செயல்முறைகளும் எப்படி இருந்தன என்பதையும் தவறாமல் பதிவு செய்து உள்ளனர். இந்த ஆவணங்களும் இன்று நமக்கு கிடைத்திராவிட்டால் தமிழகத்தின் பதினேழாவது, பதினெட்டாவது நூற்றாண்டு வரலாற்றை வரையறை செய்து வரைவதே இயலாததாகி இருக்கும்.

இந்நிலையில் கும்பெனியாரது ஆவணங்களைத் தங்களது கருத்துக் கோர்வைக்கு இயைந்ததாக இல்லையென்பதற்காக அவைகளை முற்றிலும் ஒதுக்கி விடமுடியுமா? எட்டாக் கனியென்றால் அது புளிக்குமா? துஷ்டன் மருது என்று வரைந்துள்ள தளபதி வெல்ஷ் தான், அரண்மனை சிறுவயல் காட்டு சாலையமைப்பு பணியில் மருது சேர்வைக்காரர்களது சிவகங்கைச் சீமைத் தியாகிகள் எத்தகைய நாட்டுப் பற்றுடனும் வீராவேசத்துடனும் போராடி கும்பெனியாரது திட்டத்தை நிறைவேற்ற விடாமல் சீர்குலைத்து வீராதி வீரரான தளபதி அக்கினியூவை சோழபுரத்திற்குப் பின்வாங்குமாறு செய்த மகத்தான நிகழ்ச்சியைத் தெளிவாக வரைந்து வைத்துள்ளார். சிவகங்கை கும்மியும், அம்மானையிலும் இந்தச் செய்தி விவரித்து இருக்கிறதா? இல்லையே சிவகங்கையின் இறுதி மன்னரான வேங்கன் பெரிய உடையாத் தேவர் சீமை நிர்வாகத்தை தமது பிரதானிகளான மருதிருவர் நடத்துமாறு அனுமதித்து விட்டு பெயரளவில் மன்னராக இருந்த குற்றத்திற்கு நாடு கடத்தப்பட்டு, அவரும் மற்றும் சிவகங்கை, இராமநாதபுரம், மதுரை, திருநெல்வேலிச் சீமைகளைச் சேர்ந்த வீரத் தலைவர்கள் எழுபத்து இரண்டு பேர் 11.2.1802-ம் தேதி துத்துக்குடியில் இருந்து நாடு கடத்தப்பட்டு எண்பது நாட்கள் கடற்பயணத்திலும், பின்னர் பினாங் தீவிலும் அவர்கள் பட்ட துயரங்களின் கண்ணீர்க் கதையை சிவகங்கைச் சரித்திரக்கும்மியும், அம்மானையுமா சொல்லுகிறது? தெரிவிக்கிறது? நமது நூல்களில் இந்தச் சிறப்பான செய்திகளைப் பார்க்க முடிகிறதா?

கி.பி.1783-ல் சிவகங்கைக்கு பேஷ்குஷ் தொகை வசூலுக்கு வந்த தளபதி புல்லர்டன், மதுரை திருநெல்வேலி, திண்டுக்கல், சீமையில் கும்பெனியாரது குத்தகைகாரர்கள் மக்களைக் கசக்கிப் பிழிந்து இழிவான முறையில் எப்படி கும்பெனியாருக்காக வசூல் செய்கின்றனர் என்பதைத் தெளிவாக மேலிடத்திற்கு நீண்ட அறிக்கை அனுப்பியுள்ளார். இந்த மக்கள் படும் கஷ்டங்களை நமது நாடோடி இலக்கியங்கள் பாடி இருக்கின்றனவா? இவைகளையெல்லாம் கும்பெனியாரது ஆவணங்களைத் தவிர வேறு இந்த ஆவணத்திலும் கிடைக்காத வரலாற்றுத் தொகுப்பு ஆகும். இவைகளை விடுத்து, தமிழக வரலாற்றை