பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/26

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

6 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


(முதுகுளத்தூர் வட்டம்) வேம்பு நாடு, அளற்று நாடு, (கமுதி வட்டம்) பருத்திக்குடி நாடு, கருநிலக்குடி நாடு (திருச்சுழியல் வட்டம்).

இவற்றின் உட்பிரிவுகளாக இராஜேந்திர மங்கல வளநாடு, வரகுண வளநாடு, கேரள சிங்க வள நாடுகளும், ஒல்லையர் கூற்றம், பாகனூர் கூற்றம், கானப்பேர் கூற்றம், முத்தூர் கூற்றம், மிழலை கூற்றம், துகவூர் கூற்றம் என்ற துணைப் பிரிவுகளும் இருந்து வந்துள்ளன. சேதுபதிகளின் ஆட்சியில் இவற்றில் ஒரு சில மறைந்தும், வேறு சில புதிதாக அமைந்தும் இருந்தன. இத்தகைய மாற்றங்களுக்கும், தோற்றங்களுக்கும் காரணமாக இருந்தவர் முத்து விஜய ரகுநாத சேதுபதி ஆவார். (கி.பி. 1710-28) இவரது ஆட்சிக் காலத்தில் சேதுபதி சீமை பாண்டிய நாட்டைத் தொட்டு அமைந்திருந்ததுடன், சோழவள நாட்டின் வடகடற்கரைப் பகுதியிலும் நீண்டு விரிந்து திருவாரூர் வரை இருந்ததால், நாட்டின் நிர்வாக அமைப்பைச் செம்மைப்படுத்த வேண்டிய கட்டாயம் இந்த சேது மன்னருக்கு ஏற்பட்டது.[1]

சேது நாட்டை எட்டு வருவாய்ப் பகுதிகளாகவும், எழுபத்து இரண்டு இராணுவப் பிரிவுகளாகவும், பிரித்து அவற்றுக்கு ஏற்ற நாட்டுத் தலைவர்களையும், பாளையக்காரர்களையும், ஊரகப் பணியாளர்களையும் இந்த மன்னர் நியமனம் செய்தார். இதற்காக மதுரைச் சீமையில் இருந்து பட்டோலை பிடித்து எழுதும் வேளாளக் குடிகளையும், சேது நாட்டில் குடியேறச் செய்தார். நாட்டுக் கணக்குகளை எழுதிப் பராமரித்து வர இவர்கள் பயன்படுத்தப் பட்டனர். இத்தகைய செயல் மாற்றங்களின் பொழுது கடமை உணர்வுடனும் இராஜ விசுவாசத்துடனும் மன்னருக்கு உறுதுணையாக இருந்த செயல் மறவர்களில் குறிப்பிடத் தக்கவர் நாலு கோட்டைப் பாளையக்காரரான பெரிய உடையாத் தேவர் ஆவார். தமிழக வரலாற்றில் சிறப்பான இடத்தைப் பின்னர் பெற உள்ளவர் இவர் என்பதை, அன்றைய சூழ்நிலையில் யாரும் எதிர் பார்த்து இருக்க முடியாது.

நாலு கோட்டைப் பாளையம்

திருமலை இரகுநாத சேதுபதி மன்னர் ஆட்சியின் பொழுது (கி.பி. 1645-78) சேது நாட்டின் வடமேற்குப் பகுதியில், அரசு இறை தண்டல் செய்வது மிகுந்த மந்தமாக இருந்தது. இதனைத் தவிர்த்து, மற்ற பகுதிகளைப் போல தண்டல் பணிகளை மேற் கொள்ளத் தகுதியான ஒருவரை நாலுகோட்டைப் பகுதிக்கு நியமனம் செய்ய வேண்டிய


  1. Raja Rama Rao - Manual of Rammad Samasthanam (1891) P: 236