பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

240 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


கெளரி வல்லபர்காளையார் கோவில் சிறையில் இருந்து உயிர்தப்பி வந்த பொழுது தான் (கி.பி.1792-ம் ஆண்டின் இறுதியில்) இராமநாதபுரம் கோட்டையில் சேதுபதி மன்னரைச் சந்தித்தார். தமக்கு இழைக்கப்பட்ட தீங்குகளைத் தெரிவிப்பதற்காக. அப்பொழுது சேதுபதி மன்னர் மூன்று மனைவிகளுக்குக் கணவனாக இருந்தார் அவருக்கு வயது 34. ஆனால் மருது பாண்டியர் மன்னர் நூலாசிரியர்அப்பொழுது சேதுபதி மன்னருக்கு வயது இருபது ("ம.பா.ம.பக்கம் 157) என்று எவ்வித ஆதாரமில்லாமல் வரைந்துள்ளார். அத்துடன் தமக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணந்து கொள்ளுமாறு வேறு ஒருவரிடம் சென்று யாராவது நிர்ப்பந்திப்பார்களா? இதுவும் இலக்கியத்தில்தான் நடக்க முடியும். தான் காதலித்த இளவரசி தமயந்தியை, சுயம்வரத்தின் பொழுது இந்திரனுக்கு மாலை சூட்ட வற்புறுத்துவதற்கு, அதே தமயந்தியிடம் நளன் தாது சென்றதாக நளவெண்பா, நைடதம் ஆகிய இலக்கியங்களில்தான் காணமுடிகிறது.

ஆனால் சேதுபதி மன்னருக்கும் சிவகங்கைப் பிரதானிகளுக்கும் இடையில் எழுந்த சகோதர யுத்தங்களுக்கு காரணம் இது அல்ல வேறு உள.

முதலாவதாக சேதுபதி மன்னர் திருச்சிக் கோட்டை சிறையில் இருந்த பொழுது நவாப்பினது ஆட்சியில் சேதுபதி சீமையின் வடக்குப் பகுதி முழுவதையும் மன்னரது தாய்மாமனாரான ஆறுமுகம் கோட்டை மாப்பிள்ளைச் சாமித் தேவர், ஐதர்அலியின் படை உதவி பெற்று அவரது ஆக்கிரமிப்பில் வைத்து இருந்தார். கி.பி.1780-ல் சிவகங்கை மீட்சி பெற்ற பொழுது சிவகங்கைப் பிரதானிகளும் சேதுபதி நாட்டின் சில பகுதிகளைத் தங்களது கைவசம் வைத்திருந்தனர். கி.பி.1781 ஏப்ரலில் ஆற்காடு நவாப் அவரை விடுதலை செய்து மறவர் சீமையின் மன்னராக அங்கீகரித்து மீண்டும் இராமநாதபுரத்தில் அமர்ந்த பொழுது, மன்னர் முத்துராமலிங்க சேதுபதி மாப்பிள்ளைத் தேவன், மருது இருவர், ஆகியவர்களது ஆக்கிரமிப்பை அகற்றி மீட்டார். கி.பி.1795-ல் மீண்டும் சிறைப்படுத்தப்பட்ட பொழுது மன்னர் கம்பெனி கவர்னருக்கு எழுதிய கடிதத்தில் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மருதிருவர் மீது குரோதம் கொள்வதற்கான முதற்காரணம் இது.

அடுத்து, சிவகங்கைச் சொந்தமான தொண்டி துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி செய்யப்படும் அனைத்துப் பொருள்களும் தொண்டிக்கு மேற்கே பத்துக்கல் தொலைவில் உள்ள இராமநாதபுரம் சீமையான திருவாடானையில் உள்ள சுங்கச்சாவடியில் உரிய சுங்கம் செலுத்திய பிறகுதான் வெளியே அனுமதிக்கப்படும். தஞ்சையில் இருந்து சிவகங்கைக்கு தொண்டி வழியாக எடுத்துச்சென்ற நெல் மூட்டைகளுக்கு சிவகங்கை அரசு செலுத்த வேண்டிய சுங்கவரி பாக்கி ரூபாய் பதினாயிரத்தை செலுத்தாமல் சிவகங்கை பிரதானிகள் இழுத்தடித்தனர்.