பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 7


நிர்பந்தம் எழுந்தது. அங்குள்ள மக்கள் பெரும்பாலும் கள்ளர் இனத்தவராக இருந்ததாலும் அவர்களில் மன்னர் விரும்பிய தகுதியுடையவர் யாரும் இல்லாத காரணத்தினாலும் புகலூர் வட்டகையில் உள்ள உத்தமனூரைச் சேர்ந்த மன்னரது உறவினர் ஒருவரை அந்தப் பணிக்கு நியமனம் செய்தார். வரலாற்று சிறப்புடைய சோழபுரத்திற்கு அண்மையில் கோட்டை ஒன்றினை அமைத்து அந்த பாளையக்காரர் அங்கிருந்து செயல்பட்டார். அந்த, கோட்டை தான், பின்னர் நாலு கோட்டை என வழங்கப் பெற்றது என நம்பப்படுகிறது.[1]

இன்றும் இந்த ஊரில் சேதுபதி மன்னரது செம்பிநாட்டுக் கிளையைச் சேர்ந்த இருபது குடும்பங்கள் மட்டும் இருந்து வருகின்றன. அண்மைக்காலம் வரை சிவகங்கை அரண்மனையில் நடைபெற்ற அனைத்துக் காரியங்களிலும் இவர்கள் கலந்து கொண்டு தங்களது பாரம்பரிய உறவினைச் சுட்டும் வகையில் உலுப்பை போன்ற மரியாதைகள் செலுத்தி வந்தனர் என்பதும் கள ஆய்வின் பொழுது தெரிய வந்தது.[2]

அந்த பாளையக்காரரின் வழியினரான பெரிய உடையாத் தேவருக்கு மூன்று மனைவிகள் இருந்தனர். முதல் மனைவியைப் பற்றிய விவரம் கிடைக்கவில்லை.

இரண்டாமவர் இராமநாதபுரத்தைச் சேர்ந்த சங்கர குமாரத் தேவர் என்ற போர் மறவரது மகள் சிந்தாமணி நாச்சியார் என்பவர். ஒருமுறை சேதுபதி மன்னரைச் சந்திக்க இராமநாதபுரம் சென்றபொழுது, தமது தந்தையைப் போன்று, வாள் சண்டையிலும், சிலம்பு விளையாட்டுகளிலும் இளைஞர்களைப் பொருதி, தோல்வியுறச் செய்த இந்தக் கன்னியின் பேராற்றலில் மனதைப் பறி கொடுத்த இவர், சிந்தையை நிறைத்த சிந்தாமணியைக் கவர்ந்து வந்து நாலுகோட்டையில் திருமணம் செய்து கொண்டார். மூன்றாவது மனைவி கோவனூர் நாச்சியார். கோவனூர் சென்று இருந்தபொழுது, அந்த யுவதியின் அற்புத அழகின் கவர்ச்சியில் மயங்கி அந்தக் கன்னிகையை மணந்தார் என்பது செவி வழிச் செய்தி. வேறு சில ஆவணங்களும் இதனை உறுதிப்படுத்துகிறது.[3] முதல் மனைவியின் மூலம் பிறந்தவர், சசிவர்ணத் தேவர். ஏனைய இரு மனைவிகளில் - சிந்தாமணி நாச்சியார் மூலம் பிறந்த செல்வ ரகுநாததேவர், கோவனூர் நாச்சியார் மூலம் பிறந்த பூவுலகுத் தேவர், லவலோசனத் தேவர், திரியம்பகத் தேவர் ஆகிய நான்கு மக்களையும் விட அழகிலும், ஆற்றலிலும் சசிவர்ணத் தேவர் சிறந்து காணப்பட்டார்.


  1. சிவகங்கை சமஸ்தான ஆவணங்கள்.
  2. கள ஆய்வின்போது நாலு கோட்டை கிராமத்து முதியவர் திரு. சங்குத் தேவர் (வயது 81) வழங்கிய செய்தி.
  3. செல்வரகுநாதன் கோட்டை (தற்பொழுதைய சிவரக்கோட்டை) ஆவணங்கள்.