பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

8 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


ஆதலால் இவரைச் சேதுபதி மன்னர் தமது மருமகனாக வரித்துக் கொள்வதற்கு முடிவு செய்தார். மன்னரது முடிவு பெரிய உடையாத் தேவருக்கு பெருமகிழ்ச்சியை அளித்தது. சேதுபதியின் மகள் அகிலாண்டேஸ்வரி. நாச்சியாருக்கும் சசிவர்ணத் தேவருக்கும் இராமநாதபுரம் அரண்மனையில் திருமணம் சிறப்பாக நடைபெற்றது.[1]

சேதுபதி மன்னரது திருமணத் தொடர்புக்கு இன்னொரு காரணமும் இருந்தது, தளவாய் என்ற இரண்டாவது சடைக்கத்தேவர் சேதுபதியான பொழுது, அவருக்குப் போட்டியாக கூத்தன் சேதுபதியின் மகன் பெத்தன்னா என்ற தம்பித் தேவர், கலகக்கொடி உயர்த்தியதைப் போன்று இப்பொழுது கிழவன் சேதுபதியின் வைப்பு மகன் பவானிசங்கரத்தேவர். முத்து விஜயரகுநாத சேதுபதி பட்டம் சூடியதை எதிர்த்து சேது நாட்டு மக்களின் ஆதரவைத் திரட்டினான். தொண்டமானும் பவானி சங்கரத் தேவருக்கு ஆதரவாகச் செயல்பட்டார். மேலும் சேதுநாட்டில் வடக்கே காளையார் கோவிலை அடுத்த செருவத்தி பாளையக்காரரைப் போன்ற வடக்கு வட்டகைப் பாளையக்காரர்களை கண்காணித்து கட்டுக்குள் வைத்துக்கொள்வதற்கு அரசியல் நெருக்கத்தை விட குடும்ப உறவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்ற எண்ணத்தில் சேதுபதி மன்னர் நாலுகோட்டை உடையாத் தேவரின் மகனை, தனது மருமகனாக்கிக் கொண்டார். இந்த உறவின் காரணமாக, தனது சம்பந்தியான பெரிய உடையாத் தேவரது அரசியல் தகுதியை முன்னூறு போர் வீரர் தளபதி' பதவியில் இருந்து ஆயிரம் போர் வீரர்களது தளபதியாக பதவி உயர்வு அளித்தார். தனது மருமகன் சசிவர்ணத் தேவரையும் வெள்ளிக் குறிச்சிக்கு ஆளுநராக நியமனம் செய்தார்.[2]

வெண்ணெய் திரளும்போது தாழி உடைந்தது என்பது ஒரு வழக்கு. இணக்கமான சூழ்நிலை உருவாகும்போது எதிர் மறையான நிகழ்வுகள் ஏற்படுவதை குறித்து இவ்விதம் சொல்வது உண்டு. தனது மூத்த மகனுக்கு சேதுபதி மன்னரது மகளை மணம் செய்வித்து மனம் மகிழ்ந்த பெரிய உடையாத் தேவரது மனநிறைவு நீடிக்கவில்லை. அவர் நோய் வாய்ப்பட்டார். அந்த நோயிலேயே அவரது வாழ்க்கை முடிந்துவிட்டது. நாலுகோட்டை மக்கள் மட்டுமல்லாமல், இராமநாதபுரம் சேதுபதி மன்னரும் இந்த இழப்பினால் மிகுந்த வேதனைக்குள்ளானார். குறிப்பாக பெரிய உடையத் தேவர் மரணம் சேது நாட்டின் பாதுகாப்பிற்கு ஏற்பட்ட பலவீனமாக அப்பொழுது கருதப்பட்டது. இருபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர் சேது நாட்டின் வடக்கு காவல் அரணான


  1. Raja Rama Rao - Manual of Ramnad Samasthanam (1891) P: 237
  2. Ibid. P: 239.