பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 11


தேவரது தந்தை கிழவன் சேதுபதி முப்பத்திரண்டு ஆண்டுகள் அமர்ந்து ஆட்சி செய்த சிறப்பான அதே அரியணையில் அமர்ந்தார்.

அப்பொழுது வெள்ளிக் குறிச்சியின் ஆளுநராக இருந்த சேதுபதியின் மருமகனான சசிவர்ணத் தேவர் பதவியை இழந்தார். தனது அவல நிலையைத் தெரிவிப்பதற்காக அவர் தஞ்சாவூர் மன்னரிடம் சென்றார். அப்பொழுது, இராமநாதபுரம் சேதுபதி பட்டத்திற்கு அருகதையுள்ள கட்டத்தேவரும் (இறந்துபோன சுந்தரேச தண்டத் தேவரது சகோதரர்) அங்கு வந்து இருந்தார். இருவரும் அவர்களுக்கு ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலையைத் தஞ்சை மன்னரிடம் விளக்கியதுடன் பவானி சங்கரத் தேவரது கொடுங்கோல் ஆட்சியை அகற்ற படை உதவி கோரினர்.[1]

பவானி சங்கரத் தேவர் முன்னர் இவ்விதம் உதவி கோரி வந்ததும் அவருக்கு உதவி புரிந்து ஏமாந்ததும் மராட்டிய மன்னரது மனதில் பளிச்சிட்டது. எச்சரிக்கை உணர்வையும் தோற்றுவித்தது, என்றாலும், இழந்த நாட்டுப் பகுதியை சேதுபதியிடமிருந்து மீட்க வேண்டுமென்ற எண்ணம் அவரது உள்ளத்தில் ஓங்கி நின்றது. ஆதலால், தஞ்சாவூர் மன்னர் சேது நாட்டு இளவல்களது கோரிக்கையினை ஏற்றுக் கொண்டார். ஆனால் அதே பழைய நிபந்தனையை ஒரு சிறு மாற்றத்துடன்.

தஞ்சையிலிருந்து பெரும்படை சேது நாட்டை நோக்கி புறப்படும். பாம்பாற்றின் வடகரையை அந்த படையினர் வந்து அடையும் பொழுது அதன் ஒரு அணி மட்டும் நிலை கொள்ளும். மற்றவர்கள் தொடர்ந்து முன்னேறி இராமநாதபுரம் கோட்டையைப் பிடித்து, சசிவர்ணத் தேவரும், கட்டத் தேவரும் கோட்டைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டவுடன் தஞ்சை படைகள் திரும்பி பாம்பாற்றில் வட கரைக்கு வந்துவிடும். அங்கு நிலை கொண்டுள்ள அணியுடன் சேர்ந்து அந்தப் பகுதியின் பாதுகாப்பில் ஈடுபடும். அதாவது ஒரு புறம் உதவி; மறுபுறம் சேதுநாட்டின் பாம்பாற்றுப் பகுதி தஞ்சைமன்னரது ஆளுகைக்குள்தானே அமைந்துவிடும்.

இதுதான் அந்த நிபந்தனை. பவானி சங்கர சேதுபதியிடமிருந்து சேது நாட்டை மீட்க வேறு வழியில்லை. சசிவர்ணத் தேவரும், கட்டத் தேவரும் அந்த நிபந்தனைகளுக்கு ஒப்புதல் அளித்தனர். தஞ்சைப்படை தெற்கு நோக்கி புறப்பட்ட செய்தி இராமநாதபுரம் கோட்டைக்கு எட்டியது. பவானி சங்கரத் தேவர் அவசரமாக ஒரளவு படைகளை திரட்டியவாறு விரைந்து சென்றார். இரண்டு படைகளும் ஓரியூர் அருகே


  1. Raja Rama Rao - Manual of Rammad Samasthananam (1891). P: 240