பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/36

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


அருப்புக்கோட்டை, மானவீர மதுரை, தொண்டி வழியாக சோழ நாட்டை இணைக்கும் பழைய வாணிகச் சாத்து வழியும் இணையும் இடத்தில் புதிய சிவகங்கைக் கோட்டை நிர்மாணிக்கப்பட்டது. ஏறத்தாழ இராமநாதபுரம் கோட்டை அமைப்பை போன்றே செவ்வக வடிவில், ஆனால் அகழி இல்லாமல் இருபது அடி உயரமும் இரண்டு அடி அகலமும் கொண்ட சுற்றுச் சுவரினால் அந்தக் கோட்டை அமைக்கப்பட்டது. ஒரே முகப்பு வழியை உடைய இந்த கோட்டையில் மன்னரது மாளிகை நடுப்பகுதியிலும். மாளிகையை ஒட்டி ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயமும், தெற்கில் அரச மகளிரது குடியிருப்பும் வடக்குப் பகுதியில் நீராழிக்குளம், உல்லாச மண்டபங்கள் ஆகியவைகளும் நிர்மாணிக்கப்பட்டன. சசிவர்ணத் தேவரது துணைவியார், அகிலாண்ட ஈசுவரி நாச்சியார் திருமணமாகி கணவருடன் நாலுகோட்டை வந்தபொழுது அவரது வழிபடு தெய்வமாகிய இராமநாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இருந்து பிடிமண் எடுத்துவந்து நாலுகோட்டை மாளிகையில் வைத்து வணங்கி வந்ததாகவும், அங்கிருந்து சிவகங்கை அரண்மனை அமைத்தபொழுது, அதே புனித பிடிமண்ணை பீடத்தின் அடியில் வைத்து அதன் மீது இந்த ராஜராஜேஸ்வரி பீடம் முதலிலும், பின்னர் தெய்வத் திருமேனி ஸ்தாபிதமும் செய்யப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

இந்த புதிய சீமையின் முதலாவது மன்னர் சசிவர்ண பெரிய உடையாத் தேவர். இவருக்கு இரு மனைவியர் இருந்தனர். ஒருவர் இராமநாதபுரம் சேதுபதி மன்னரது மகள் அகிலாண்ட ஈஸ்வரி நாச்சியார் மற்றவர் பூதக்காள் நாச்சியார். முதலாமவருக்கு மூன்று பெண்களும், பட்டாபி ராமசுவாமி, சுவர்ணகிளைத் தேவர் என்ற இரு ஆண் மக்களும் இருந்தனர். இவர்கள் இருவரும் இளமையில் காலமாகிவிட்டனர் என்று ஊகிக்க முடிகிறது. இதன் காரணமாக இரண்டாவது மனைவியை மணந்து அவர் மூலம் முத்து வடுகநாதர் மூன்றாவது மகனாகப் பிறந்தார் என்றும் தெரிய வருகிறது. நாலுகோட்டை பெரிய உடையாத் தேவரது முதல் மனைவியாரது மைந்தர் என்ற பொருளில் பெரிய உடையாத்தேவர் என்ற விகுதியும் அரசு நிலையிட்ட என்ற விருதும், தொன்மையான சேதுபதி மன்னரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை குறிக்கும் 'விஜய ரகுநாத' என்ற தொடரும் இணைந்து இந்த மன்னரது அரசு ஆவணங்களில் 'அரசு நிலையிட்ட விஜய ரகுநாத சசிவர்ண பெரிய உடையாத்தேவர் என குறிக்கப்பட்டு வரலாயிற்று. இவரது ஆட்சிக் காலத்தை அறுதியிட்டு சொல்லும் ஆவணம் எதுவும் கிடைக்காத காரணத்தினால், இந்த மன்னர் கி.பி. 1749 வரை ஆட்சி செலுத்தியிருக்க வேண்டும் என வரலாற்றில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக இவரது ஆட்சி அமைதியும், வளமையும், மிகுந்த காலமாக அமைந்திருந்தது. அதிலும் குறிப்பாக அண்மையில் உள்ள மதுரைச் சீமையின் அரசியலில் குழப்பங்கள் கலந்து