பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/38

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

மக்கள் அல்லோலப்பட்ட சூழ்நிலையில், இந்த புதிய சின்ன மறவர்சீமை எவ்வித பிரச்சனையுமின்றி மக்களது ஆன்மீக, சமுதாய நற்பணிகளில் அக்கறை கொண்ட அரசாக செயல்பட்டு வந்து இருப்பது ஒரு அரிய சாதனையாகும். இதற்கு ஏதுவாக அமைந்த அன்றைய தமிழக அரசியல் வரலாற்றையும் ஓரளவு அறிந்து கொள்வது இங்கு அவசியமாகிறது.

சிவகங்கைச் சீமை என்றதொரு புதியதொரு அரசு உதயமான பொழுது தமிழகம் முழுமைக்கும் கடந்த முன்னுற்று ஐம்பது ஆண்டுகளாக ஒரே தன்னரசாக மதுரையையும், திருச்சியையும் கோநகராக கொண்டு ஆட்சி செய்து வந்த மதுரை நாயக்கர் அரசு அப்பொழுது அஸ்தமனத்தை எட்டிக் கொண்டிருந்தது. அந்த அரசின் கடைசி ராணியாக விளங்கிய ராணி மீனாட்சியின் தற்கொலையுடன் அந்த அரசு கி.பி. 1736-ல் முற்றுப் பெற்றது. அந்த ஆட்சிக் கட்டிலில் அமருவதற்கு ஆசைப்பட்ட ராணியின் உறவினரான பங்காரு திருமலையின் முயற்சிகள் ஒரு புறம் இருக்க, தமிழகம் முழுவதற்குமான மேலாண்மை உரிமையை ஐதராபாத் நிஜாமிடமிருந்து பெற்றிருப்பதாக கூறிக்கொண்டு ஆற்காடு நவாப் பதவிக்கு சாந்தா சாகிபு ஒரு புறமும், வாலாஜா முகமது அலி மற்றொரு புறமுமாக போட்டியிட்டு திருச்சி, மதுரைச் சீமை மக்களை ஆட்டிப் படைத்ததுடன், தாராபுரத்தில் இருந்து, களக்காடு வரையிலான பாளையக்காரர்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வர இந்த நவாபுகள் பலவாறு எத்தனித்தனர்.

தமிழகத்தில் அரசின் சலுகைகளுடன் வியாபாரம் செய்து லாபம் ஈட்டுவதில் முனைந்திருந்த பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியும் ஆங்கில கிழக்கிந்தியக் கம்பெனியும் முறையே இந்த 'போட்டி நவாப்புகளை' ஆதரித்து அவர்களுக்கு தங்களது தற்காப்பு படைகளை கொடுத்து உதவி, அரசியல் ஆதாயம் பெற முயன்றதுடன் தமிழக அரசியலின் தலை விதியை நிர்ணயிக்கும் காரணிகளாகவும் விளங்கினர். இத்தகைய குழப்பமான சூழ்நிலையில் சிவகங்கைச் சீமையின் சின்ன மறவர் அரசு இயக்கம் தடையேதுமில்லாத நிலையில் அடுத்துள்ள சேதுபதியின் ஆட்சிக் கூறுகளை அடியொற்றிப் பின்பற்றியவாறு நடைபெற்று வந்தது.

சீமையின் நிர்வாகத்தில் சசிவர்ணத் தேவர் மிகுந்த கவனம் செலுத்தி வந்தார். ஏற்கனவே தமது மாமனார் முத்து விஜய ரகுநாத சேதுபதி மன்னரால் வெள்ளிக்குறிச்சி மாகாணத்தின் ஆளுநராகப் பணியாற்றிய முன் அனுபவம் அவருக்கு இப்பொழுது கை கொடுத்தது. பாதுகாப்பாக பல புதிய பாளையங்களைத் தோற்றுவித்து, புதிய பாளையக்காரர்களும், காவலர்களும் நியமனம் செய்யப்பட்டனர். தேச காவல், தலங்காவல், திசை காவல், தெற்கத்தியான் காவல் என்ற அமைப்புகள் சிறப்பாக இயங்கின. பண்டைய ஆட்சிக்காலம் தொட்டு இருந்து வந்த நாட்டு பிரிவுகள் மாற்றமில்லாமல் தொடர்ச்சி பெற்றன. இந்த புதிய சீமையில் ஒல்லையூர் நாடு, கானாடு, புறமலை நாடு, திருப்பத்தார் நாடு, தாழையூர்