பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/56

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

36 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

3. இறவாப்புகழ் கொண்ட
இரண்டாவது மன்னர்






புதிய சிவகங்கைத் தன்னரசின் இரண்டாவது மன்னராக முடிசூட்டிக் கொண்டவர் முத்துவடுகநாத பெரிய உடையாத் தேவர் என்பவர். மன்னர் சசிவர்ணத் தேவரது முதல் மனைவி அகிலாண்ட ஈசுவரி மூலம் பிறந்த பட்டாபி இராமசாமி, சுவர்ண கிளைத் தேவர் என்ற இரு ஆண்மக்கள், மன்னர் மறைவதற்கு முன்னதாகவே காலமாகி விட்டனர். ஆதலால், முத்து வடுகநாதர் மன்னராகும் வாய்ப்பை பெற்றார். மறைந்த மன்னர் சசிவர்ணத் தேவருடைய இரண்டாவது மனைவியின் மகன். அப்பொழுது அவருக்கு வயது இருபத்து ஒன்று. பதவிக்கு ஏற்ற வயது தான். ஆனால் நிர்வாகத்துக்கு மிகவும் புதியவராக இருந்ததால் அவரது தந்தையின் ஒன்றுவிட்ட சகோதரர் செல்வ ரகுநாதத் தேவர், முத்து வடுகநாத தேவருக்கு நிர்வாகத்தில் துணை புரிந்து வந்தார். இந்த இளைய அரசுக்கு பல சோதனைகள் காத்து இருந்தன. அவைகளில் ஒன்று தஞ்சைமராட்டிய மன்னரது படையெடுப்பாகும். இராமநாதபுரம், சிவகங்கை ஆகிய இரண்டு சீமைகளுக்கும் உரிய அனுமந்தக்குடி பகுதியை தஞ்சாவூர் படைகள் திடீரென்று ஆக்கிரமித்துக் கொண்டன. ஏற்கனவே கி.பி. 1728-ல் சசிவர்ணத் தேவரும், இராமநாதபுரம் கட்டத்தேவரும் பாம்பாற்றுக்கு வடக்கேயுள்ள சேது நாட்டின் நிலப்பரப்பை தஞ்சை மன்னருக்கு தாரை வார்த்துக் கொடுத்திருந்தும், பேராசை காரணமாக அப்பொழுது தஞ்சை மன்னராக இருந்த பிரதாப் சிங் பாம்பாற்றை கடந்து சேது நாட்டிற்கு வடக்கே உள்ள விரிசுழி ஆற்றின் கரையில் இருந்த அனுமந்தக் குடி வரை ஆக்கிரமித்து விட்டார். அந்த அக்கிரமச் செயலுக்கு புதுக்கோட்டை தொண்டைமானும் துணை புரிந்தார்.[1]


  1. Rajayyan. Dr. K. - History of Madura (1974) P: 50