பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 37

செய்தியறிந்த முத்து வடுகநாதரும், செல்வ ரகுநாதத் தேவரும் இராமநாதபுரம் கோட்டைக்கு விரைந்து சென்று சேதுபதி மன்னரைச் சந்தித்தனர். முடிவு அடுத்த மூன்று நாட்களில் மறவர் படை திரண்டது. சிவகங்கை மறவர்களும், சேதுபதி சீமையின் மறவர்களும் அஞ்சு கோட்டையில் சந்தித்து அணிவகுத்தனர். சேதுபதி மன்னரது வீரத் தளபதியான வெள்ளையன் சேர்வைக்காரர்தலைமையில் அனுமந்தக்குடி நோக்கி அந்த படைகள் புறப்பட்டன. மறவர் சீமைக்குரிய மகோன்னத வீரத்துடன் போர் புரிந்து வெற்றியுடன் ஆக்கிரமிப்பாளர்களைத் துரத்தி விட்டு வெற்றியுடன் திரும்பினர்.[1] ஒரு வகையாக இந்த முதல் சோதனையில் இளம் மன்னர் முத்து வடுகநாதத் தேவர் வெற்றி பெற்றுவிட்டார். என்றாலும், சிவகங்கை ஒட்டியுள்ள மதுரை, திருச்சி, தஞ்சாவூர் சீமைகளில் ஏற்பட்ட அரசியல் குழப்பங்களின் தாக்கம் சின்ன மறவர் சீமையிலும் எதிரொலித்தன.

அழிந்த கண்மாயில் மீன்பிடிப்பவர்களைப் போன்று தமிழக அரசியலை தங்களது சுயநலத்திற்குப் பயன்படுத்திய சந்தா சாகிபும், மராட்டியர், ஹைதராபாத் நிஜாம் ஆகியோர் ஒன்றன் பின் ஒன்றாகத் தளர்ந்தவுடன் நிஜாமினால் அங்கேரிக்கப்பட்ட அன்வர்தீன் திருச்சியை தலைநகராகக் கொண்டு கர்நாடக நவாப் ஆனார். ஏற்கனவே சந்தா சாகிபால் மதுரைச் சீமை அரசினை இழந்த மதுரை நாயக்க இளவல் விஜய குமாரனும் அவரது தந்தை பங்காரு திருமலையும் சிவகங்கை சீமையில் புகலிடம் பெற்றிருந்தனர்."[2] இப்பொழுது இருவரும் திருச்சி வந்து இருந்த நிஜாமை சந்தித்தனர். அவருக்கு கட்டுப்பட்டு இருப்பதாகவும் மதுரைச் சீமைக்கு கப்பமாக ஆண்டு ஒன்றுக்கு முப்பது லட்சம் ரூபாய் செலுத்துவதாகவும் ஒப்புக்கொண்டனர். நிஜாமும் அவர்களது கோரிக்கையை ஒப்புதல் அளித்து அவர்களுக்கு உதவுமாறு நவாப் அன்வர்தீனைப் பணித்தார்.[3] ஆற்காட்டிற்கு அவர்களை அழைத்துச் சென்று அவர்களுக்கு ஆசை வார்த்தை கூறிய அன்வர்தீன் ஒரு நாள் பங்காருவை விஷம் கொடுத்து கொன்றார்.[4] சதாரா சிறையிலிருந்து விடுதலைபெற்று மராட்டிய படைகளுடன் திரும்பிய சந்தா சாகிப்,நவாப் அன்வர்தீனை ஆம்பூர் போரில் கொன்ற பின்னர், திருச்சிக் கோட்டையைக் கைப்பற்றினார். அவரது தளபதி ஆலம்கான் மதுரையைப் பிடித்தார். உள்ளூர் மக்களது உணர்வுகளை மதித்தவராக மதுரையின் முந்தைய அரசு வழியினரான விஜயகுமாரனை மதுரைக்கு மன்னராக நியமித்து அவருக்குதுணை புரிய முடேமியா என்ற தனது தளபதியையும் நியமனம் செய்தார். பின்னர்,


  1. Diary Consultations Vol.9. P: 60
  2. Rajayyan Dr. K. - History of Madura (1974) P: 69
  3. Ibid - P: 87
  4. Ibid - P: 88