பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை


தொடர்புகள் வைத்து இருந்தனர். கி.பி.1639 - முதல் தமிழகத்தில் நாகப்பட்டினத்தை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்தனர். எதிர்க்கரையான இலங்கையில் மிகுந்த செல்வாக்குடன் இருந்தனர். சேது நாட்டிற்கும் டச்சுக்காரர்களுக்கும் ஏற்கனவே வணிக தொடர்புகள் இருந்ததை தளவாய் சேதுபதி ஆவணங்களில் அறிய முடிகிறது.

மதுரை திருமலை நாயக்கரது படைகள், போர்ச்சுக்கீசியரின் உதவியுடன் கி.பி. 1645-ல் இராமேசுவரம் தீவில் தளவாய் சடைக்கன் சேதுபதியினை எதிர்த்து போரிட்ட பொழுது, மறவர் சீமைப்படைகளுக்கு உதவியாக இருந்தவர்கள் இந்த டச்சுக்காரர்கள். கி.பி. 1659-ல் மே மாதத்தில் திருமலை சேதுபதிக்கு, மன்னர் முத்து சலாபத்தில் உள்ள முத்துக்குளிக்கும் உரிமையை மதித்து சேதுபதி மன்னருடன் டச்சுக்காரர்கள் உடன்படிக்கை ஒன்றை செய்ததை டச்சு ஆவணம் ஒன்று தெரிவிக்கிறது.[1]

இன்னும் மார்ட்டின் பாதிரியாரது கி.பி.1710-ம் ஆண்டுக் கடிதம் ஒன்றின் மூலம் டச்சுக்காரர் சேதுபதி மன்னரிடமிருந்து முத்து சங்கு குளிக்கும் உரிமை பெற்று இருந்தனர் என்பதை அறிய முடிகிறது.[2]

மீண்டும் மராட்டியர்கள்

மறவர் சீமையின் வடகிழக்குப் பகுதி விரிசுழி ஆற்றின் வடகரையில் அமைந்து தஞ்சாவூர் சீமையை அடுத்த பகுதியாக விளங்கியது. கி.பி.1728-ல் பாம்பாற்றின் வட பகுதியில் உள்ள சேதுபதி சீமையை தஞ்சை மன்னருக்கு விட்டுக் கொடுக்கப்பட்ட பிறகும் தொடர்ந்து அந்த பகுதியை தங்கள்ஆட்சிப் பரப்பாகக் கொள்வதற்கு மராட்டிய மன்னர்கள் முயன்று வந்தனர். அவர்களது ஆக்கிரமிப்பு நடவடிக்கையின் பகுதியாக மன்னர் துல்ஜாஜி கி.பி.1771-ல் போர் தொடங்குவதற்கு ஒரு காரணத்தை கண்டுபிடித்தார். அவருக்கு சொந்தமான சில யானைகள், மிரண்டு ஒடி வந்து சிவகங்கை காடுகளில் புகுந்து அட்டகாசம் செய்தன. மன்னர் முத்து வடுகநாதர் ஆணையின்படி அந்த யானைகள் பிடிக்கப்பட்டு கட்டி வைக்கப்பட்டன.[3] அவைகளை விடுதலை செய்து தம்மிடம் ஒப்படைக்குமாறும், அனுமந்தக்குடிப் பகுதியை தமக்கு விட்டுக் கொடுக்குமாறும் மன்னர் துல்ஜாஜி கோரினார். அடுத்து, சேதுபதி மன்னருக்கு ஆதரவான நவாபின் படை வீரர்களைப் போல் மாறுவேடம் தரித்த தஞ்சாவூர் படைகள், இராமநாதபுரம் சீமையின் வடகிழக்குப் பகுதியில் முதுவார்நத்தம் என்ற ஊரை கைப்பற்றிக்கொண்டன. அந்த


  1. Arunachalam - History of Pearl fishery in Tamil Nadu (1928) P: 134
  2. Pieris - The Dutch power in cylon. P: 236-48
  3. Military Country Correspondence Vol.19/25.3.1771/P: 109-133