பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் எஸ்.எம்.கமால் ⚫ 45


இராமநாதபுரம் அடைந்த படைகள், ஜூன் 1, 2 ஆகிய நாட்களில் கோட்டையில் முதல் வெடிப்பை ஏற்படுத்தியது. அதன் உள்பகுதியில் நிலை கொண்டு இருந்த மூவாயிரம் வீரர்களை போரில் இழந்து சேதுபதியின் அணி தோல்வியுற்றது. கோட்டையைக் கைப்பற்றிய கூட்டுப் படையினர் இராமநாதபுரம் ராணியையும், இளவரசரையும் திருச்சிக் கோட்டையில் சிறை வைத்தனர்.[1]

அடுத்து இந்த ஆக்கிரமிப்பாளர்கள் சிவகங்கைச் சீமை நோக்கி புறப்பட்டனர். மதுரையில் இருந்து வந்த அணி திருப்புவனம் நோக்கி முன்னேறியது. தளபதி ஜோசப்சுமித் நவாப் உம்தத்துல் உம்ரா ஆகியோர் மேற்கு நோக்கி முன்னேறி வந்தனர். எங்கு பார்த்தாலும், காடு, முட்செடிகள் இவைகளை கடந்து வருபவர்களைத் தடுக்கும் வகையில் வழியெங்கும் பெரிய மரங்கள் வெட்டப்பட்டு குறுக்கே தடையாக போடப்பட்டு இருந்தன.[2]

ஆங்காங்கு பதுங்கு குழிகளும் தோண்டப்பட்டு எதிரியை மடக்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. என்றாலும், சிவகங்கை கோட்டைக்கு அபாயம் இருந்ததால் எதிரிகளைச் சமாளிப்பதற்கான ஏற்ற இடம் காளையார் கோவில் காடுகள்தான் என முடிவு செய்யப்பட்டு மன்னரும், மற்றவர்களும் காளையார் கோவில் கோட்டைப் பாதுகாப்பை ஆயத்தம் செய்தனர்.[3] ஜூன் 21-ம் தேதி, தளபதி பான்ஜோர் தலைமையிலான மதுரையணி, சிவகங்கையைக் கைப்பற்றி கிழக்கே முன்னேறியது.[4] தொண்டி சாலை வழியாக காளையார் கோவிலை நோக்கி வந்த ஜோசப் சுமித், மன்னர் முத்து வடுகநாதருடன் தொடர்பு கொண்டார். உயிர்ச்சேதம், பொருட் சேதத்தை தடுப்பதற்காக மன்னரும் படை எடுப்பாளருடன் பேச்சு வார்த்தைக்கு உடன்பட்டார்.[5] இந்த முயற்சி முற்றுப்பெறுவதற்குள்ளாக, முன்னேறி வந்த மதுரை தளபதி பான்ஜோர் அணி காளையார் கோவிலை நெருங்கி வந்து தாக்குதலைத் தொடுத்தது.

ஆறிலிருந்து பத்துக்கல் தொலைவில் வடக்கிலும், மேற்கிலும் பரந்துள்ள அடர்ந்த இயற்கையான காடுகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் அந்நியர்கள் அவ்வளவு எளிதில் புகுந்து வந்து நேரடியாகப் பொருத முடியாது என தப்புக் கணக்குப் போட்ட சிவகங்கை மறவர்களுக்கு இந்தத் தாக்குதல் ஒரு பெரும் அதிர்ச்சியாக இருந்தது. துரோகிகளுக்கு என்றுமே துணையாக இருக்கும் தொண்டமானது ஐயாயிரம் பேர் கொண்ட காடு வெட்டிகள் அணி, நீண்ட அரிவாள்களுடன் வந்து, மரங்களை வெட்டிச்


  1. 62. Political Despatches to England Vols. 7–9. P. 80-81.
  2. 63. Rajayan Dr. K. - History of Madura (1974) P: 261.
  3. 64. Ibid - 261.
  4. 65. Ibid - 261.
  5. 65. Ibid - 261.