பக்கம்:சீர்மிகு சிவகங்கைச் சீமை.pdf/96

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ⚫ சீர்மிகு சிவகங்கைச் சீமை

இதனால் எழுச்சியும் ஆர்வமும் கொண்ட மக்கள் காடுகளில் கூடினர். திண்டுக்கல் சீமையில் இருந்து ராணி வேலு நாச்சியாரும், பிரதானி தாண்டவராயப் பிள்ளையும் சிவகங்கைச் சீமைக்குத் திரும்ப இருக்கும் செய்திகளை, அது தொடர்பாக அவர்கள் குடிமக்களுக்கு அனுப்பியுள்ள ரகசிய ஒலைகளைப் படிக்கக் கேட்டு பரவசமுற்றனர். நவாப்பின் கட்டுப்பாட்டில் இருந்த கோட்டைகளையும், பேட்டைகளையும் தாக்கினர். அவர்களிடம் இருந்த வில், வேல், வாள், நாட்டுத் துப்பாக்கிகள் ஆகியவைகளை இந்த தாக்குதலுக்குப் பயன்படுத்தினர். பரவலாகத் தொடர்ந்த இந்தத் தாக்குதலினால் பாதிக்கப்பட்ட நவாப்பின் பணியாளர்கள், பத்திரமான இடங்களைத் தேடிச் சென்று தங்களது பணிகளை மேற்கொண்டனர். ஆனால் எத்தனை நாட்களுக்கு இவ்விதம் பயத்திலும் பீதியிலும் கழிக்க முடியும்? நாட்கள் நகர்ந்து கொண்டிருந்தன. சிவகங்கை சீமை மக்களது அந்நிய எதிர்ப்பு உணர்வும் அதிகரித்துக் கொண்டே வந்தது.[1]

இந்த மக்களில் சிலர் ராணியாரது நிலையை வலுப்படுத்தி நவாப்பின் ஆதிக்கத்தில் இருந்து சிவகங்கையை மீட்பதற்கு விருபாட்சிக்கு புறப்பட்டுச் சென்றனர். இவையெல்லாம், சிவகங்கைச் சீமையில் நவாப் முகம்மது அலியின் மூத்த மகனது நேரடி நிர்வாகம் என்ற தேர் வெகு விரைவில் நிலைக்கு வரவிருப்பதைத் தெளிவாக எடுத்துக் காட்டின.


  1. Kadirvelu.Dr.S. - History of Maravas (1977). P: 165