பக்கம்:சீவகன் கதை.pdf/55

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

54

சீவகன் கதை


லின் கரைக்கு வந்து சேர்ந்தனர். சீதத்தனை அழைத்துச் சென்ற தரன் என்பான்,அவனுக்கு உண்மையை உணர்த்தி, 'துன்பமுற்றவர்க்கலால் இன்பமில்லை' (579) என்பதை விளக்கி, அவன் கலம் உடைந்ததாகப் பெற்ற துன்பத்தின் எல்லையிலே அப்போது இன்பம் பெற்று நிற்பதைக் காட்டினான். மேலும், கலம் தன் மாயத்தால் மறைக்கப்பட்டதையும், அது மீண்டுந் தோன்றியுள்ளதையும் விளக்கி, அக்கப்பலையும் காட்டினான் அவன்.சீதத்தனோ, 'இத்தகைய இன்ப முடிவு தரும் துன்பம் என்றென்றும் உறுவதாக!' எனக்கூறி, அனைவரிடத்தும் விடை பெற்றுத் தத்தையுடனும், பிற பொருளுடனும் கப்பல் ஏறினான்; கப்பலிலுள்ளவர்களுக்கெல்லாம் நடந்த வரலாற்றை விளக்கினான். நாடகம் போன்றுள்ள அந்நிகழ்ச்சியை எண்ணி அனைவரும் வியந்தனர். பின்னர் அனைவரும் மகிழக் கப்பல் புறப்பட்டது. சீதத்தன், பெருஞ்செல்வத்தோடும், சீர் சிறப்பு வரிசைகளோடும், நலம் பெற வந்த தத்தையோடும் இராசமாபுரத்துத் தன் மாளிகையில் புகுந்தான்.


தத்தையின் சுயம்வரம்:

சீதத்தன் தன் வரவை எதிர்நோக்கியிருந்த பதுமையாம் தன் மனைவிமகிழத் தான் இல்லில் புகுந்த பின், காந்தருவதத்தையைப் பற்றிய செய்தியெல்லாம் கூறி, உடனே அவளுக்கு மணமுடிக்க வேண்டிய அவசியத்தையும் விளக்கினான்; தத்தையைக்கன்னி மாடத்தே இருக்கப் பணித்து, மேல் நடக்க வேண்டுவனவற்றை ஆராய்ந்தான். தன் அரசனாய் உள்ள கட்டியங்காரனிடம் சென்று தத்தையின் வரலாற்றைக் கூறி, அவளுக்கு மணமுடிக்க வேண்டுமென, அவனும் அதற்கு வேண்டும் உதவிகளைச் செய்யலானான். அரசன் இசைவு பெற்ற வணிகன் தத்தையின் மணநாளை நிச்சயித்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சீவகன்_கதை.pdf/55&oldid=1484095" இலிருந்து மீள்விக்கப்பட்டது