பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114சீவக சிந்தாமணி



“அதை ஒரு மகிழ்ச்சி மிக்க விழாவாகக் கொண்டாடினேன்; ஒரு பெண் வயதுக்கு வந்தால் எப்படி எப்படிக் கொண்டாடுவார்களோ அப்படிக் கொண்டாடினோம்”

“அதில் உனக்கு என்ன மகிழ்ச்சி”

“அந்தப் பெண்ணின் தாய் நான் தானே; நட்டுவைத்த முல்லை பட்டுப் போகாமல் பூ ஈன்றது என்றால் எனக்குப் பெருமகிழ்ச்சி தானே.”

“அதை ஏன் இப்பொழுது சொல்லிக் கொண்டிருக்கிறாய்?”

“அதைச் சென்று நான் பார்க்கவே இல்லை; அதற்குள் குரவம் பூ ஆசை என்னை இழுத்தது; அரவும் என்னைத் தொட்டுவிட்டது” என்றாள்.

“பழைய கதைதானே”

இருவரும் “பிக்நிக்” சென்றனர்.

முல்லைக் கொடி இவள் நட்டு வைத்த பொற்கொம்பினைத் தழுவிக் கொண்டு இருந்தது.

“இதற்குள் மணமும் ஆகிவிட்டது போல இருக்கிறதே; கொழு கொம்பினைத் தழுவிக் கொண்டு இருக்கிறது” என்றான்.

“அதுவும் நம்மைப்போலத்தான்” என்றாள்.

சற்றுத் தொலைவில் பாம்புகடித்த அந்தச் சரித்திர வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடத்தை அடைந்தனர்.

அவள் சொன்னாள்;

“அன்றும் இப்படித்தான்; இந்தக் குரவத்தைச் சுற்றி வண்டும் தேனும் உறவு கொண்டு சுற்றிக் கொண்டிருந்தன.” என்றாள்.