பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முத்தி இலம்பகம்185


தல்கள், மரணம் என்பது இயற்கை நியதி. அதுதான் உலகத்தை இளமையாக்கி வைத்துள்ளது. நேற்று இருந்தவன் இன்று இல்லை என்று பேசுவது அதுதான் இந்த உலகத்தின் பெருமையே; தனிப்பட்டவர் மறையலாம். ஆனால் மனிதம் வாழ்ந்து கொண்டுதான் இருக்கும், இயற்கையின் படைப்பு அழியாத ஒன்று.”

“செல்வம் என்பது கல்வி, கேள்வி, பொருள் மட்டுமல்ல; மக்கள், மனைவி, குடும்பம் இவை அத்துணையும் செல்வமே. மனிதருக்குப் பயன்படுபவை அனைத்தும் செல்வம் ஆகும். இந்த இயற்கைப் படைப்பே மாபெரும் செல்வம் ஆகும். மனிதன் எவற்றைப் போற்றுகிறானோ அதுதான் செல்வம் எனப்படுகிறது” என்று விளக்கினார்.

அவன் மனத்தில் அரித்துக் கொண்டே இருந்த காட்சி இதுதான்.

அவன் தன் இன்னுயிர்த் துணைவியருடன் சோலைக்கு இனிது பொழுது போக்கச் சென்றிருந்தான்.

மந்தியின் ஊடலைத் தீர்க்க அதன் நந்தியாகிய ஆண் குரங்கு பலாப்பழம் ஒன்று பறித்துச் சுளைகளை எடுத்துத் தந்தது. அது தின்பதற்கு முன் அதனினும் உரிமை உடைய தோட்டத்துக்குக் காவலன் அதைத் துரத்தி விட்டு அவன் அதைத் தன் மனைவிக்குத் தந்தான்.

இந்தக் காட்சி அவனைச் சிந்திக்க வைத்தது. கட்டியங்காரன் கையில் இருந்து தான் பறித்துக் கொண்ட ஆட்சி நாளைக்கு யாருக்கோ என்று என்ணினான். வலியார் எளியோரை அடித்து நொறுக்குவதும், அவர் தம் உடைமையைச் சூறையாடுவதும் இயற்கையாகி விட்டது என்பதை உணர்ந்தான்.

இதனால் இரண்டு உண்மைகள் அவனுக்கு விளங்கின. பொருள் கை மாறும் என்பது; மற்றொன்று வலிமையே வெல்கிறது என்பது.