பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காந்தருவ தத்தை இலம்பகம்45



வளர்ந்தாய், அண்ணாந்து ஏந்திய வளர்இளமுலை தளரும் என்பதற்காகத் தாய் வீட்டிலேயே இருக்க முடிந்ததா! இங்கே வந்த பிறகுதானே நீ தாய்மை அடைந்தாய். பெண்ணுக்கு முதற்பிறப்புத் தாய்வீடு; மறுபிறப்புக் கணவன் வீடு; அவள் அங்கே சுதந்திரப் பறவையாக இந்த உலகத்தைக் காணவேண்டும்; காதல் ஒருவனைக் கைப்பிடித்தே காரியம் யாவையும் சாதிக்க வேண்டும்; அவளை மகிழ்வோடு அனுப்பு, அயல் நாட்டுப் படிப்புக்கு நம்நாட்டு இளைஞர்கள் சென்று வருகிறார்கள். மண வாழ்க்கை என்பது கூட ஒரு புதிய பள்ளிதான். ‘குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்’ என்ற நம் நாட்டுப் பாவேந்தன் சொல்லிக் கேள்விப்படவில்லையா? அவள் அங்குத் துணைவேந்தனாக இருந்து ஆட்சி நடத்துவாள்; வழி அனுப்பிவை” என்றான்.

தரன் என்பவன் பூவால் அலங்கரிக்கப்பட்ட விமானம் கொண்டு வந்து நிறுத்தினான்; பலர் அவளுக்குத் துணையாக ஏறினர்.

வீணாபதி என்ற பேடி ஒருத்தி அவள் நெருங்கிய தோழியாக இருந்தவள். யாழிசையில் கூறுபாடுகளை எல்லாம் நன்கு அறிந்தவள். அவளையும் உடன் செல்க என்று அனுப்பி வைத்தான். தத்தை இசை பழகப் பயன் படுத்திய யாழ்க்கருவிகள் பலவற்றையும் உடன் அவள் எடுத்துச் சென்றாள்.

பெற்று வளர்க்க வேண்டிய சிரமம் இன்றி மகள் பேறாக உற்றுத் தன்னை அடைந்த அந்தக் கற்ற ஒருத்தியை அழைத்துக் கொண்டு பழைய தீவைச் சென்று அடைந்தான். அங்கே அவன் ஏறிவந்த மரக்கலம் கரையில் பழைய தீவிலேயே விடப்பட்டு இருந்தது. அவர்கள் மகிழ்ச்சியோடு எந்தவிதக் குறையும் இன்றி இவன் வருகைக்காகக் காத்துக் கிடந்தனர்.