பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை5


அதனால் இதை நேர் கவிபெயர்ப்பாக அமைக்காமல் இக்காலப் போக்கிற்கு இயையச் சுவையும் அழகும் நயமும் மிக்க உரை நடை வடிவம் தரப்பட்டுள்ளது.

மூல நூலினின்று இது அடிப்படையில் மாறுபட வில்லை; மாற்றும் உரிமையை எடுத்துக் கொள்ளவில்லை; அதன் உள்ளடக்கம் சிறிதும் வழுவாமல் புதிய வடிவம் தந்திருக்கிறேன்; அவ்வளவுதான்.

கதையின் இயக்கத்திற்குச் சில கூட்டல் கழித்தல்கள் தேவையாயின. முன்பின் இணைத்துக் கூற வேண்டுவதாக ஆயிற்று.

இருபதாம் நூற்றாண்டு இலக்கிய உரைநடைத் தமிழ் வேறு: அக்காலத் தமிழ் வேறு; ஆயிரம் ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு திருத்தக்கதேவர் சொல்நடையை இன்று எடுத்து எழுத இயலாது. உவமைகளும் ஒரு சில புதிது தேவைப்பட்டன. அந்த வகையில் மூல நூலினின்று சற்று வேறுபடுகிறது.

இது சமண நூல் என்று முத்திரை குத்தப்பட்டு விட்டது. எந்தச் சமயமும் மனித தர்மத்தையே கூறுகிறது. அதைக் கூறும் முதல் மனிதன் வழிபடும் கடவுள் ஆகிவிடு கிறார். அவர் பெயரில் இக்கருத்துகளுக்கு ஒரு சமய நெறி என்ற முத்திரை தரப்படுகிறது. அதன் கருத்துக்கள் கொள்கைகள் மானிட சமுதாயம் முழுவதும் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாக இருப்பதால் அவற்றை வேறு புதிய போக்கில் விளக்க வேண்டியது ஆயிற்று.

காலத்துக்கேற்ற வகையில் அறிவுக்கு ஏற்கக் கூடிய வகையில் அவை இங்குக் கூறப்பட்டுள்ளன. அவற்றை எடுத்துக் கூறப் புதிய உத்திமுறைகள் கையாளப்பட்டு இருக்கின்றன.