பக்கம்:சீவக சிந்தாமணி (உரைநடை).pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76சீவக சிந்தாமணி



பெற்றுவிட்டாய். அவனிடத்தில் பாடம் படிக்க நீ போட்ட விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. நீ கெட்டிக் காரியாகிவிட்டாய்; பந்தயத்தில் வென்று விட்டாய்.”

“குணமாலையார் என்ற பெயரைக் கேட்டே அவன் முடிவு செய்து விட்டான்” என்று குற்றம் சாற்றினாள்.

“சுரமஞ்சரி என்று பெயர் வைத்து என் பெற்றோர்கள் தவறு இழைத்து விட்டனர். சாதகம் பார்த்துக் கணிப்பது போல அவன் உனக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கி விட்டான் எனக்கு அது பாதகம் ஆகிவிட்டது. மாலைக்கு ஒரு காலம் வந்தால் மஞ்சரிக்கும் ஒரு காலம் வரும்; அடைந்தால் அவனை அடைவேன்; இப்பொழுது மனம் உடைவேன்; காமன், அவன் வில் அது விடும் கணை என்னைத் தொடாது. கன்னிமாடம் இனிச் சேர்வேன்” எனறாள்.

“ஆடவன் என்றால் அவன்தான் ஆடவன்; மற்றவர்களை மதித்துக் கண்ணெடுத்தும்பாரேன்” என்றாள்.

“மண்ணுக்குள்ளே சில மாதர் உன் நல்ல அறிவைக் கெடுத்துவிட்டார்கள்; கண்ணுக்கு இனியவன் என்கிறாய்; அதனால் அவனைக் காதலிப்பது இயற்கைதான்; அதனால் மனம் புண்ணாகும்படி நீ புழுங்கினால் பயன் என்ன?” என்றாள் குணமாலை.

“அவனுக்கு உன்னைப் பிடித்து விட்டது; நீ புளியங் கொம்பைப் பற்றிக் கொண்டாய்; அதனால் களிப்பு மிக்க வாழ்வு பெறப் போகிறாய். உன்னைப்பற்றி அவன் பிறரை விசாரித்து இருப்பான்; நான் அவசரக்காரி ஆவேசக்காரி என்று கூறி இருப்பார்கள்; அதை அவன் விசாரிக்காமலேயே எடுத்துக் கொண்டிருப்பான். நீ குணக்குன்று; நான் மணற்குன்று; நீ நிறைகுடம்; நான் அரைவேக்காடு, நீ அகல் விளக்கு நான் ஒளி விளக்கு நின்று எரிவாய், நான் அணைந்து எரிவேன் என்று அறைந்திருப்பார்கள்.”