பக்கம்:சுதந்திரமா.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வைகறைத் துயில் எழு

9

அருமையான காலத்தை உண்டாக்கினாரே, அந்தக் காலத்தில் மனிதன் தனிமையாகச் சிந்திக்கவும் படிக்கவும் எழுதவும் முடியும்படி அவனைச் சிருஷ்டித்திருக்கிறாரே, மூளையென்ற ஒன்றை அவனுக்குக் கொடுத்து அந்த அருமையான விடியற்காலத்தில் அதில் குளிர்ச்சியையும் தெளிவையும் கூர்மையையும் புகுத்துகிறாரே! ஆஹா! கருணாநிதி என்றால் அவருக்கே தகும்.—என் உள்ளம் நன்றியறிவிலும் பக்தியிலும் மூழ்கி மூழ்கி எழுந்தது.

சங்கற்பம் செய்துகொண்டேன்; அந்த வாரம் திங்கட்கிழமை முதல் விடியற்காலம் எழுந்துவிடுவதென்று உறுதியாகத் தீர்மானம் செய்து கொண்டேன். சனிக்கிழமை இரவு படுத்தால் ஞாயிற்றுக் கிழமை காலையில் எழுந்திருக்கிறோம். ஞாயிற்றுக் கிழமை ஓய்வு நாளாகையால் கடைசி கடைசியென்று ஆசை தீரக் காலையில் பத்துமணி வரையில் தூங்கி விட்டு, காலைத் தூக்கத்துக்கு அப்பொழுதே விடை கொடுத்துவிடலாம் என்பது என் எண்ணம். அதனால்தான் என்னுடைய விரதத்தைத் திங்கட்கிழமைக்குத் தள்ளி வைத்துக் கொண்டேன்.

“இந்தா, திங்கட்கிழமை நாலு மணிக்கே நான் எழுந்திருக்கப் போகிறேன். உடனே ஸ்நானம் செய்யப் போகிறேன். உன்னையும் எழுப்பி விடுகிறேன். சும்மா நம்முடைய ஆயுளைத் தூக்கத்தில் கழித்து விடலாமா?” என்று என் மனைவியிடம் பெருமிதத்தோடு சொன்னேன். அவள் அலட்சியமாகப் புன்னகை பூத்தாள். ‘இவள் நம்மை மதிக்கவில்லை. நாம் விளையாட்டுக்காகச் சொல்கிறோம் என்று நினைக்கிறாள். இவள் நினைப்பைக் குலைக்க வேண்டும்’ என்று கொஞ்சம் கோபத்தோடே சபதம் செய்து கொண்டேன்.

ஞாயிற்றுக்கிழமை இரவில் வழக்கத்துக்கு மாறாகச் சீக்கிரமே படுத்துக் கொண்டேன். சாதாரணமாக இரவில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுதந்திரமா.pdf/17&oldid=1314343" இலிருந்து மீள்விக்கப்பட்டது