பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13 3. மலையில் இருந்த பறவைகள் எல்லாம், கடல் ஒலி யும் நாணும்படி உரத்த குரல் எழுப்பி, மேலே எழுந்து பறந்து வானத்தை மறைத்து விட்டனவாம். 4. நிலை தடுமாறிய யானைகள் அஞ்சிக் கீழே விழாமல் இருக்கத் தம் தும்பிக்கைகளால் மரங்களைச் சுற்றிப் பிடித்துக்கொண்டிருந்தனவாம். 5. புலிகள் குட்டிகளை வாயில் கவ்விக்கொண்டு அங்கும் இங்கும் ஓடினவாம். 6. அனுமன் அழுத்தி ஊன்றியதால் கீழே அழுந்திய குன்றம், அனுமன் கூம்புபோல் இருக்கக் கடலில் அழுந்தும் கப்பல்போல் தோன்றியதாம். 7. குங்குமம், சாந்தம், தேன், மலர்களின் மகரந்தப் பொடி முதலியன கலந்ததால் அருவிகள் நிறம் மாறி ஒடுவது, மலை பிளந்ததால் குருதி (இரத்தம்) வெளிப்பட்டு ஒடுவது போன்றிருந்ததாம். 8. மலை பிளந்து வெடித்ததும், என்னவோ என அஞ்சித் தெய்வ மகளிர் தேவர்களைக் கட்டிக் கொண்டமை, கயிலை மலையை இராவணன் எடுத்தபோது சிவனை உமாதேவி கட்டிக் கொண்டது போன்றிருந்தது. 9. அனுமன் எழுந்த விசையினால், மலையில் உள்ள கற்கள், மண், விலங்குகள், மரம் செடி கொடிகள் முதலியன கடலில் வீழ்ந்து கடலைத் தூர்த்தன. இது, இராமன் அங்கு வருவதற்கு முன்பே சேது அணை கட்டத் தொடங்கியது போல் கருதத் தோன்றியது. 10. மலை அழுத்தத்தால் கடல் நீர் இரண்டாகப் பிளக்க, கீழே உள்ள நாகர் உலகம் தெரிந்தது. அரவு அரசனின் உலகம் காணும் வாய்ப்பும் பெற்றேன் என அனுமன் எண்ணினானாம்.