பக்கம்:சுந்தர காண்டச் சுரங்கம்.pdf/236

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. சில அணி நயங்கள் கம்பர் சுந்தர காண்டத்தில் நயமான சில அணிகளைப் பாடல்களில் அமைத்துக் காப்பியத்தைச் சுவைப்படுத்தி யுள்ளார். ஆங்கிலத்தில் அணியை Figure of Speech என்று கூறுவர். உவமை-உருவக அணிகள் முன்பு தனித்தலைப்பில் இடம் பெற்றுள்ளன. இந்தப் பகுதியிலே 'வேற்றுப் பொருள் வைப்பு அணி', 'தற்குறிப்பு ஏற்ற அணி முதலிய சில அணி களையும் சிறிது விதந்து காண்பாம் முதலில் வேற்றுப் பொருள் வைப்பு அணி வருமாறு : வேற்றுப் பொருள் வைப்பு அணி ஒரு நிகழ்ச்சியை விவரித்து, அதிலிருந்து பெறக்கூடியஉலகறியும் ஒரு பொது உண்மையை வேறாக-தனியாகக் கூறுவது "வேற்றுப் பொருள் வைப்பு அணியாகும்.”

முன்னொன்று தொடங்கி மற்றது முடித்தற்குப்

பின்னொரு பொருளை உலகறி பெற்றி ஏற்றிவைத் துரைப்பது வேற்றுப் பொருள் வைப்பே' (47). என்பது, அணிகள் பற்றிக் கூறும் தண்டியலங்காரம்' என்னும் நூலில் உள்ள நூற்பா ஆகும். இதற்குப் பிறிது. மொழிதல் அணி என்ற பெயரும் கூறுவதுண்டு.