பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சூறாவளி

33

வலிக்கும் மாத்திரை போட்டுக் கொண்டு அயராது தமிழ்ப் பணி செய்வது இந்தப் பெயர் எடுப்பதற்குத் தானா? ஐயகோ! தெய்வமே! என்ன செய்வேன்!

இந்த மனப்புண்ணுக்கு மருந்தாக, என் நூல்களால் ஈர்க்கப்பட்டு என்மேல் அன்பு மழை பொழிந்துள்ள அறிஞர்களைப் பற்றி நன்றியுடன் இங்கே குறிப்பிட விரும்புகிறேன். இதனால் என் நூல்களின் தகுதியும் உணரப் படலாம்.

நீதிபதிகளின் அன்புமழை:

1. மாண்புமிகு நீதிபதி மகராசன் புதுவையில் தலைமை நீதிபதியாயிருந்தார். அப்போது அவருக்கு என் நூல்கள் சிலவற்றைத் தந்துள்ளேன். பின்னர் அவர் சென்னை நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.

1973-பிப்ரவரியில், சென்னை இராஜாஜி மண்டபத்தில் எனது நூல் ஒன்றுக்குத் தமிழக அரசின் பரிசைப் பெற்றுக் கொண்டு மேடையிலிருந்து கீழே இறங்கினேன். கீழே முதல் வரிசையின் முனையில் அமர்ந்திருந்த நீதிபதி மகராசன், 'சுந்தர சண்முகனார்' என விளித்து என் கையைப் பிடித்துக்கொண்டார். மூளைக்கட்டிப் பிணியாளனாகிய யான் இரவில் விளக்கு வெளிச்சத்தில் கண்திறந்து பார்த்தால் மயக்கம் வந்துவிடும்; அதனால், கரிய 'பிளாஸ்டிக்' கண்ணாடி அணிந்திருந்தேன். இந்த நிலையில் யாரோ இருக்கிறார் என்பது தெரியுமே தவிர, இன்னார் எனப் புரிந்து கொள்ள முடியாது. ஐயா மகராசன் என் கையைப் பிடித்துக்கொண்டதும், பிளாஸ்டிக் கண்ணாடியைக் கழற்றிவிட்டுப் பார்த்து வணங்கி அவர் காலடியில் அமர்ந்தவாறு சிறிது நேரம் மெதுவாகப் பேசியிருந்து விட்டுச் சென்றேன்.