பக்கம்:சுந்தர காண்டச் சூறாவளி.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சூறாவளி

இவ்வளவு புகழ் பெற்ற என்னைச் சுந்தரகாண்டச் சுரங்க நூலின் மதிப்புரையாளர் மிகவும் மட்டப்படுத்தி எழுதலாமா? வேண்டுமானால், இதைத் தவிர்த்திருக்கலாம்-அதைத் தவிர்த்திருக்கலாம் என்பது போல நாகரிகமாக மறுப்பு அறிவித்திருக்கலாம். மனப்புண் உண்டாகும்படி-மானம் போகும்படி மட்டப்படுத்தாமல், இரண்டு மூன்று நிறைகளையாவது எடுத்துக் காட்டியிருக்கலாம். மாறாக எழுதியதால், என் மானங் காக்க யான் இவ்வளவு எழுத-வேண்டி வந்தது. எனக்கு மானம் பறிபோன மனப் புண்ணோடு, இப்போது காலமும் முயற்சியும் பணமும் வீணாய்ச் செலவாயின. சட்டி பானைகள் பல செய்யக் குயவர்க்குப் பல நாட்கள் தேவைப்படும். அவற்றைத் தடியால் அடித்து உடைப்பவருக்கோ ஒரு சில மணித்துளி நேரம் போதும். இதுதான் இப்போது நடந்திருக்கிறது.


ஆராய்ச்சியை நகைச் சுவையுடன் எழுதுபவன் என்னும் பெயர் பெற்றவன் நான். நூலில் ஆங்காங்கே நகைச்சுவை கலந்து (Satire) கிண்டலுடன் நான் எழுதுவேன். இதுபோன்ற அமைப்பு மதிப்புரையாளர்க்குப் பிடிக்காதோ என்னவோ? மக்களை மகிழ்விப்பதற்காக யான் இவ்வாறு எழுதுவதுண்டு. இது போன்றவற்றைக் குறைபாடாய்க் கருதலாகாது. மாதிரிக்காக, "வந்தெனைக் கரம் பற்றிய வைகல்" என்று தொடங்கும் கம்பர் பாடலுக்கு யான் வரைந்துள்ள நான்கு பக்க விளக்கத்தைப் படித்துப் பார்க்கின் இது புலனாகும்.

"நூல் உரை போதக ஆசிரியர் மூவரும் முக்குண வசத்தால் முறைமயங் குவரே"

என்பதற்கு ஏற்ப. அப்படியே ஏதாவது குறைபாடு இருப்பினும் இப்படியா மட்டமான மதிப்புரை எழுதுவது?


எனவே, இனியாயினும் இதுபோல் மதிப்புரை எழுதாமல், நாகரிகமாக மதிப்புரை வரையும்படி