பக்கம்:சுயம்வரம்.pdf/124

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

121


வெளியே நடந்தாள்; மாதவனும் வேறு வழியின்றி அவளைத் தொடர்ந்தான்.

தியேட்டரை விட்டு வெளியே வந்ததும், 'இனி என்ன?' என்ற பிரச்னை மீண்டும் வந்து அவனைப் பற்றிக் கொண்டது. அவளுடன் நடந்துகொண்டே அவன் அதைப் பற்றி யோசித்தான், யோசித்தான், அப்படி யோசித்தான்.

பார்க்கப்போனால் மனச்சாட்சியை மதிக்காமல் வாழக் கூடியவனுக்கு அது ஒரு பிரச்னையே அல்ல; 'எனக்குப் பிடித்தவளை நான் கலியாணம் செய்து கொண்டு விட்டேன். அதற்கு மேலும் என் வாழ்க்கையில் குறுக்கிட நீ யார்? போ!' என்று அவன் அவளை எப்பொழுதோ விரட்டிவிட்டுத் தன் வழியே போயிருப்பான். பின்னால் அவள் மனம் மாறி வேறு யாரையாவது கலியாணம் செய்து கொண்டால், 'விட்டது சனியன்!' என்று தலை முழுகி யிருப்பான்; தற்கொலை செய்து கொண்டால், 'ஐயோ பாவம்! த்சொ, த்சொ!' என்று 'த்சொ' கொட்டிக்கொண்டே, தன்னையும் மீறி எரியும் தன் மனத்தை 'ஐஸ் கிரீம்' சாப்பிட்டுக் குளிர வைத்துக்கொண்டிருப்பான்!

மாதவனாலோ தன் மனச்சாட்சியை எப்போதுமே மதிக்காமல் இருக்க முடிவதில்லை . அதிலும், "நான் சின்னஞ் சிறுமியாயிருந்தபோதே, 'நீங்கள் எனக்கே எனக்கு; நான் உங்களுக்கே உங்களுக்கும்!' என்று என் பெற்றோர் மட்டுமல்ல; உங்கள் பெற்றோரும் என்னிடம் சொல்லி வந்தார்கள். அன்றிருந்தே உண்ணும் உணவில் நான் உங்களைக் கண்டேன்; உடுக்கும் உடையில் நான் உங்களைக் கண்டேன்; பேசும் பேச்சில் நான் உங்களைக் கண்டேன்; சிரிக்கும் சிரிப்பில் நான் உங்களைக் கண்டேன். சூடும் மலரிலும், விளையாடும் பொம்மையிலும்கூட நான் உங்களைக் கண்டேன், கண்டேன், கண்டுகொண்டே இருந்தேன். அப்படியெல்லாம் கண்டு, கண்டபின் என்னுடைய நெஞ்சிலேயே உங்களைக் கொண்டு,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/124&oldid=1384967" இலிருந்து மீள்விக்கப்பட்டது