பக்கம்:சுயம்வரம்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

129


இதைக் கேட்டதும் தன்னை யாரோ தூக்கி வாரிப் போடுவதுபோல் இருந்தது மாமிக்கு; "விபத்தா! எப்போது நடந்ததாம்?" என்று திகிலுடன் கேட்டாள்.

"நேற்றிரவு நடந்திருக்கும் போலிருக்கிறது; விடியற்காலையில் தந்தி வந்தது. நாங்கள் உடனே ஒரு டாக்சியைப் பிடித்துக்கொண்டு அங்கிருந்து புறப்பட்டு வருகிறோம்" என்றாள் சாரதாம்பாள்.

லட்டு மாமிக்கு இப்போதுதான் போன உயிர் திரும்பி வந்தது போல் இருந்தது; "நேற்று இரவுதானே நடந்திருக்கும் என்கிறீர்கள்? இன்று காலையில் நடந்திருக்காதே!" என்றாள்.

அதற்குள் பொறுமை இழந்த சாரதாம்பாள், "ஐயோ! இப்படிப் பேசிக்கொண்டிருக்கவா நாங்கள் இத்தனை அவசரமாக இங்கே ஓடி வந்தோம்? அவன் எந்த ஆஸ்பத்திரியில் இருக்கிறான்? அதைக் கொஞ்சம் சொல்லேன், முதலில்!" என்று பரபரத்தாள்.

அப்போது மாதவனும் நீலாவும் சேர்ந்தாற்போல் உள்ளே நுழைய, "அதோ பாருங்கள்!" என்றாள் மாமி, பொங்கி வந்த புதுச் சிரிப்புடன்.

அவ்வளவுதான்; சாரதாம்பாள் ஓடிச் சென்று அவர்கள் இருவரையும் தாவி அணைத்துக்கொண்டு, "எதற்கு வந்தேனோ, ஏன் வந்தேனோ? நீங்கள் இருவரும் இப்படி சேர்ந்தாற்போல் வரும் காட்சியை ஒரு முறையாவது பார்க்க இந்த ஜன்மத்தில் கொடுத்து வைத்திருந்தேனே, அதுவே போதும் எனக்கு!" என்றாள்.

நீலா, மாதவனை ஓரக் கண்ணால் பார்த்துச் சிரித்தாள்; மாதவனும் அவளை அதே மாதிரி பார்த்துச் சிரித்தான்!

அதற்குள் ஆசை தீர்ந்த சாரதாம்பாள் அவர்கள் இருவரையும் உள்ளே அனுப்பிவிட்டு, "இப்போது தெரிந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/132&oldid=1384846" இலிருந்து மீள்விக்கப்பட்டது