பக்கம்:சுயம்வரம்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

சுயம்வரம்


"அதற்காக உங்களை நான் காதலிப்பதாக நீங்கள் நினைத்துக்கொண்டு விடாதீர்கள்!" என்றாள் அவள்.

"அதை நானும் எதிர்பார்க்கவில்லை, அருணா! என்னுடைய 'பாலிசி'தான் உனக்குத் தெரியுமே? 'ஒருவனுக்கு ஒருத்தி, ஒருத்திக்கு ஒருவன்' என்ற 'போர்' அடிக்கும் வாழ்க்கையை எந்த நிலையிலும் விடாமல் கட்டிக்கொண்டு அழ விரும்புபவர்களுக்குத்தானே காதலும் கலியாணமும் வேண்டும்? எனக்கெதற்கு அதெல்லாம்!" என்றான் அவன், அலட்சியமாக.

"அதனால்தான் அந்த மாதவன் உதைத்ததைக் கூட உங்களுடைய 'பாலிசி'க்குக் கிடைத்த பரிசாக நீங்கள் ஏற்றுக் கொண்டு விட்டீர்கள் போல் இருக்கிறது!"

இதைச் சொல்லிவிட்டு அவள் மறுபடியும் சிரித்தாள், அந்தச் சிரிப்பைத் தாங்க முடியவில்லை அவனால்; "சிரிக்காதே!" என்று அவளை அதட்டிவிட்டு, "அந்தப் பரிசுக்குரிய தண்டனையை அவனுக்கு நான் அளிக்காமல் விடமாட்டேன்!" என்றான் வெஞ்சினத்துடன்.

"அப்படி என்ன தண்டனை அளிக்கப் போகிறீர்கள் அவருக்கு?" என்றாள் அவள்.

"அதைச் சொல்வதற்கு இது ஏற்ற இடமும் அல்ல; நேரமும் அல்ல!" என்றான் அவன்.

"அப்படியானால் ஏறுங்கள் டாச்சியில்; ஏதாவது ஒரு ஓட்டலுக்குப் போவோம்!" என்றாள் அவள்.

அவன் ஏறிக்கொண்டான்; டாக்சி பறந்தது!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/139&oldid=1384862" இலிருந்து மீள்விக்கப்பட்டது