பக்கம்:சுயம்வரம்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 புனிதம் மிக்க ‘ராமாயணம்’ புண்ணியவான்களுக்கு
மட்டுமல்ல, பாவிகளுக்குமல்லவா உதவித்
தொலைக்கிறது!...

18


மாடிப் பூங்காவின் ஒரு மூலைக்குப் போய் உட்கார்ந்ததும் உட்காராததுமாக இருக்கும்போதே ‘சர்வ’ரிடம் ஆனந்தனைச் சுட்டிக் காட்டி, “முதலில் இவருக்கு இரண்டு ஐஸ் வாட்டர்” என்றாள் அருணா.

“போதாது; நான்கு!” என்றான் அவன்.

“அத்தனை உதையா வாங்கினர்கள்?” என்றாள் அருணா, வேண்டுமென்றே. ‘அந்த அவமானத்துக்குரிய விஷய’த்தை அவனுக்கு மீண்டும் மீண்டும் நினைவூட்டி, அவனுடைய வயிற்றெரிச்சலைக் கொட்டிக் கொள்ள வேண்டுமென்பதற்காக.

“இதோ பார், அருணா! திரும்பத் திரும்ப நீ அதையே சொல்லிக்கொண்டிருந்தால் எனக்கு ரொம்பக் கோபம் வரும், ஆமாம்!” என்றான் அவன்.

“வரட்டும்; நன்றாக வரட்டும்!” என்றாள் அவள்.

“வந்து என்ன செய்ய? என்னால் நிச்சயமாக அவனைத் திருப்பி உதைக்க முடியாது!” என்றான் அவன், அத்துடனாவது அவள் தன்னை விட்டுத் தொலைக்கட்டும் என்ற நோக்கத்துடன்.

“அது எனக்கும் தெரியும்”! என்று சொல்லிவிட்டு, “அதனால் என்ன, ராமனை உதைத்துவிட்டா ராவணன் சீதையைத் துக்கிக்கொண்டு போனான்?” என்றாள் அவள். வேறு ஏதாவது ஒரு வகையில் அவனை மேலும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள எண்ணி.

இதைக் கேட்டவுடன் அவனுக்கும் அதுவரை புலப்படாத ஏதோ ஒரு வழி புலப்பட்டதுபோல் இருந்தது. அவன் சொன்னான்:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/140&oldid=1385184" இலிருந்து மீள்விக்கப்பட்டது