பக்கம்:சுயம்வரம்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

சுயம்வரம்


"உண்மைதான்; ராவணனுக்கு மாரீசன் துணையாயிருந்தது போல் எனக்கும் யாராவது துணையாயிருந்தால்..."

"என்ன செய்வீர்கள், மதனாவைத் தூக்கிக்கொண்டு போய்விடுவீர்களா?"

"நிச்சயமாக!"

"தூக்கிக்கொண்டு போய் என்ன செய்வீர்கள், அசோக மரத்தடியில் சிறை வைப்பீர்களா?"

"அவளை நான் ஏன் சிறை வைக்க வேண்டும். அவன் அவளைத் தேடிக்கொண்டு வந்து மறுபடியும் என்னை உதைப்பதற்கா?"

"வேறு என்ன செய்வீர்கள், அவளைக் கொன்று விடுவீர்களா?"

"அவளை நான் ஏன் கொல்லவேண்டும்? செய்வதைச் செய்தால் அவளே தன்னைக் கொன்றுகொண்டு விடுகிறாள்!"

"ஆஹா! அந்த ஒரு காரியத்தை மட்டும் எனக்காக நீங்கள் செய்துவிட்டால்..."

அவள் முடிக்கவில்லை; "என்ன தருவாய்?" என்று அவள் முகத்துக்கு நேராகத் தன் முகத்தை நீட்டினான் அவன்.

தன்னுடைய தளிர்க் கரத்தால் அவன் முகத்தைச் சற்றே நகர்த்தி, "அதை இப்போது சொல்ல மாட்டேன்!" என்றாள் அவள், அதுவரை இல்லாத வெட்கத்தைத் திடீரென்று எங்கிருந்தோவரவழைத்துக்கொண்டு.

அதுதான் சமயமென்று அவனும் சட்டென்று அவள் கரத்தைப் பற்றி, "நீ சொல்லாவிட்டால் என்ன, நானே சொல்லட்டுமா?" என்றான் கொஞ்சம் குழைந்து.

"சொல்லுங்கள்!" என்றாள் அவளும் சற்றே நெளிந்து.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/141&oldid=1384866" இலிருந்து மீள்விக்கப்பட்டது