பக்கம்:சுயம்வரம்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

35


தனி வீடு பார்த்து வைக்காமல் இருந்திருப்பானா? தக்க சமயத்தில் வந்து கழுத்தை அறுக்கத் தன் மாமாவை வீட்டுக்கு வரவழைத்திருப்பானா?"

"என்னது, மாமாவை அவர் வரவழைத்தாரா?"

"வேறு யார் வரவழைத்ததாம்? அவனுடைய அப்பாவும் அம்மாவுமே அதற்குத் தடையாக இருப்பார்கள் என்று அவன் முதலில் எதிர்பார்த்தானாம். அவர்கள் சொல்லிக்கொள்ளாமல் போய்விடவே, வேறு யாரைக் கொண்டு முட்டுக்கட்டை போடுவதென்று யோசித்துக் கொண்டே 'முதல் இரவுக்கு ஏதோ வாங்கப் போகிறேன்' என்று உன்னிடம் சொல்லிவிட்டு அவன் பூக்கடைக்குப் போனானாம். வழியில் மாமா கிடைத்தாராம். ஏதோ ஓர் ஓட்டலில் தங்கப்போன அவரை வற்புறுத்தி வீட்டுக்கு வரச் சொல்லிவிட்டு... உன்னிடம் ஒரு பாவமும் அறியாதவன் போல் அவன் நாடகமாடியிருக்கிறான்!"

"அட, பாவி! அவன் இப்படியெல்லாம் செய்வதன் நோக்கம்?"

"சீச்சீ! நான் அந்த மாதவனை 'அவன், இவன்' என்று சொன்னாலும் நீ அப்படிச் சொல்லக் கூடாது. என்ன இருந்தாலும் அவன் உன் கணவன்; நீ அவனுக்கு உன் கழுத்தைக் குனிந்து கொடுத்திருக்கிறாய்!"

"சரி, அவர்ர்ர்ர் நோக்கம்தான் என்ன?" என்று தன் ஆத்திரம் அத்தனையையும் அந்த ர்'ரில் காட்டினாள் அவள்.

"வேறென்ன, உன் வாழ்க்கையை வீணாக்குவதுதான்! இனி வேறு யாரையும் கலியாணம் செய்து கொண்டு நீ வாழ முடியாதல்லவா?"

"ஏன் முடியாது? அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில்தான் கணவனும் மனைவியும் ஒருவரையொருவர் விரும்பவில்லையென்றால் உடனே விவாகரத்துச் செய்து கொண்டு விடலாமே!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/38&oldid=1384951" இலிருந்து மீள்விக்கப்பட்டது