பக்கம்:சுயம்வரம்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

சுயம்வரம்


எல்லாவற்றையும்தான் சொல்லியிருக்கிறான்!" என்று கூறிக் கொண்டே, கதவைத் திறந்து கொண்டு உள்ளே சென்று, உடை மாற்றலானாள் அவள்.

மதனாவுக்கு ஒன்றும் புரியவில்லை. ஒரு பக்கம் பார்த்தால், மாதவன் தன்னை இன்னும் கை விட்டுவிட வில்லை என்று அவளுக்குத் தோன்றிற்று; இன்னொரு பக்கம் பார்த்தால், அவர் தன்னைக் கைவிடாவிட்டாலும் தான் அவரைக் கைவிடுவதற்கு வேண்டிய காரியங்கள் அனைத்தையும் அவர் ஒன்று விடாமல் செய்து கொண்டிருப்பதாகவும் தோன்றிற்று.

இதற்கிடையில் அவரைப் பற்றித் தான் கேள்விப்பட்ட அந்தக் கதை - அதுதான் தன்னைப் பார்த்துத் திரௌபதி எதற்கோ சிரித்தாள் என்பதற்காகத் துரியோதனன் அவளைச் சூதில் வென்று துகிலுரிந்தது போல, மாதவனும் தன்னைப் பழிக்குப் பழி வாங்க நினைக்கிறார் என்று தான் அவரைப் பற்றிக் கேள்விப்பட்ட அந்தக் கதை உண்மையாயிருக்குமா? எம்.யு.சி. மைதானத்தில் அவர் ஒரு சமயம் கிரிக்கெட் ஆடியபோது, அவரைப் பார்த்துத் தான் சிரித்தது என்னவோ உண்மை. அதற்காக?... நான் மட்டுமா அன்று அவரைப் பார்த்துச் சிரித்தேன்? என்னுடன் சேர்ந்து எத்தனையோ பெண்கள் சிரித்தார்களே? என்னைப் பழி வாங்குவது போல் அவர்களையும் பழி வாங்க முடியுமா அவரால்? அல்லது, அருணா சொல்வதுபோல, அதற்காகவே அவர் என்னைக் கலியாணம் செய்து கொண்டது உண்மையானால், அதே மாதிரி அவர்கள் அனைவரையும் கலியாணம் செய்துகொண்டு பழி வாங்க முடியுமா; அவரால்?....

நடக்காத காரியம்!

ஆனால், சமயம் பார்த்து மாமாவை வந்து கதவைத் தட்டச் சொன்னது?...

அது நடக்கக் கூடிய காரியம்தானே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/57&oldid=1384677" இலிருந்து மீள்விக்கப்பட்டது