பக்கம்:சுயம்வரம்.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64

சுயம்வரம்


வந்து இங்கே நிறுத்துகிறேன்!" என்றாள் இவள், தன்னை மறந்து.

அவள் சிரித்து, "சாயந்திரம் ஆனந்தனோடு போகச் சொன்னாய்; இப்போது மாதவனை அழைத்துக்கொண்டு இங்கே வருகிறேன் என்கிறாய், இவற்றில் எதை நம்புவது நான்?" என்றாள்.

சட்டென்று உதட்டைக் கடித்துக்கொண்ட அருணா, "அடி, பாவி! அதை நிஜமென்றே நம்பிவிட்டாயா நீ?" என்றாள், 'கலகல'வென நகைத்து.

"பின்னே பொய்யா?" என்றாள் மதனா, குழம்பி.

"சந்தேகமில்லாமல், அதைவிட நானே உனக்கு அந்தப் பிரசித்தி பெற்ற ஒரு துளி விஷம், ஒரு முழம் கயிறு, ஒரு பாழுங்கிணறு - இவற்றில் ஏதாவது ஒன்றைத் தேடிக் கொடுத்துவிடுவேனே!"

"அப்படியானால் நேற்று நீ சொன்ன அந்தத் திரௌபதி கதை...?"

"அதுவும் அந்த ஆனந்தன் சொன்னதுதானே! அதை எப்படி அப்படியே நம்பிவிட முடியும்?"

"அப்படியானால்..."

"நானும் ஆனந்தனை நம்பவில்லையடி, நம்பவில்லை "

அருணா இப்படிச் சொன்னாளோ, இல்லையோ, அவளை அப்படியே தாவி அணைத்துக்கொண்டு, "கொஞ்ச நேரத்துக்கு முன்னால் உன்னைப் பற்றி நான் என்னவெல்லாம் நினைத்து விட்டேனடி!" என்றாள் மதனா, கண்களில் நீர் ததும்ப.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/67&oldid=1384702" இலிருந்து மீள்விக்கப்பட்டது