பக்கம்:சுயம்வரம்.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

69


கொள்ளுங்கள்; ஜமீன்தார் மாதிரி இருக்கும்!" என்று அவள் கோபித்துக்கொண்டு 'தொப், தொப்' என்று காலை எடுத்து வைத்து நடக்க, "கோபித்துக்கொள்ளாதே அருணா, சொல்வதைக் கொஞ்சம் புரியும்படியாகத்தான் சொல்லேன்?" என்று அவன் அவளுக்குப் பின்னால் ஓட, "கிட்ட வாங்க, சொல்கிறேன்" என்று அவள் திரும்பி, அவனைத் தன் அருகே அழைத்து, அவன் தலையைப் பிடித்து, அவனுடைய காதைத் தன் வாயோடு அணைத்து, "காதல் பண்றேன்" என்று முகம் சிவக்கச் சொல்ல, அப்போது ஏதோ காரியமாக வெளியே வந்த 'லட்டு மாமி' அதைப் பார்த்து வேறு விதமாக நினைத்து வெறுப்படைந்து, "இது என்னடியம்மா, அக்கிரமமாயிருக்கு? பட்டப் பகல்லே, நட்ட நடு வீதியிலே, பல பேருக்கு முன்னிலையிலே, சினிமாவில் பண்ற மாதிரியில்லே இவங்க பண்றாங்க" என்று முகவாய்க் கட்டையின் மேல் கையை வைத்துக் கொண்டு நிற்க, "ஐயோ மாமி, இது ஆபீஸ் ரகசியம், மாமி வேறே ஒண்ணும் இல்லே" என்று சொல்லிக் கொண்டே மாதவன் திரும்பினான்.

"அவ்வளவு பெரிய ரகசியமாயிருந்தா, அதை அவ உள்ளே வந்து சொல்லக் கூடாதா?" என்றாள் அவள்.

"வெளியே நின்று சொல்லும்போதே நீங்கள் இப்படி நினைக்கிறீர்களே, உள்ளே வந்து சொன்னால் என்ன நினைப்பீர்கள்?" என்றாள் அருணா, 'களுக்'கென்று சிரித்து.

"சிரிப்பைப் பார், சிரிப்பை!" என்று கருவிக்கொண்டே 'லட்டு மாமி' உள்ளே செல்ல, அவள் தலை மறைந்ததும், "இதைச் சொல்லத்தானா நீ இவ்வளவு தூரம் வந்தாய்?" என்றான் மாதவன்.

"பார்த்தீர்களா? எதையோ சொல்ல வந்து, எதையோ சொல்லிக்கொண்டு நிற்கிறேன் நான்! உங்களை என்று நான் முதன் முறையாகப் பார்த்தேனோ, அன்றிலிருந்து என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/72&oldid=1384717" இலிருந்து மீள்விக்கப்பட்டது