பக்கம்:சுயம்வரம்.pdf/76

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

73

"அவர்கள் இருவரையும் கேட்காதபோது என்னை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்?"

"உன்னையும் கேட்கவில்லை; என்னை நானே கேட்டுக் கொள்கிறேன்!"

"சரி, கேட்டுக் கொள்ளுங்கள்; நான் வரட்டுமா?"

அவள் திரும்பினாள்; "மதனாவைக் காணோம் என்று மொட்டையாகச் சொல்லிவிட்டுப் போனால்..." என்று அவன் இழுத்தான்.

"காது மூக்கு வைத்துக் 'கதை' கட்டிச் சொல்ல எனக்குத் தெரியாதே!" என்றாள் அவள்.

"உன்னை நம்பித்தானே அவளை நான் அங்கே அனுப்பி வைத்தேன்?"

"அந்த ஒரு விஷயத்திலாவது என்னை நீங்கள் நம்பியது பற்றி மகிழ்ச்சி. ஆனால் அந்த நம்பிக்கைக்கு விரோதமாக நான் நடந்து கொள்ளவில்லையே! இரவில் என்னுடன் படுத்தவளைப் பொழுது விடிந்ததும் காணா விட்டால் அதற்கு நானா பொறுப்பு?" என்றாள் அவள்.

அவன் ஒரு கணம் யோசித்தான்; மறுகணம், "ஏதாவது கடிதம் கிடிதம் எழுதி வைத்துவிட்டுப் போயிருக்கிறாளா என்று பார்த்தாயா?" என்றான்.

"பார்த்தேன்; ஒன்றுமில்லை" என்றாள் அவள்.

"எங்கே போயிருப்பாள்?"

"அந்தக் கேள்வியைத்தான் அவள் காணாமற் போனதிலிருந்து என்னுடைய உள்ளமும் என்னைக் கேட்டுக்கொண்டே இருக்கிறது!"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சுயம்வரம்.pdf/76&oldid=1384737" இலிருந்து மீள்விக்கப்பட்டது